Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

குருகுலப் போராட்டம்
பாவலர் நாரா. நாச்சியப்பன்



குருகுலப் போராட்டம் சமூகநீதியின் தொடக்க வரலாறு

நாரா நாச்சியப்பன்

அன்னை நாகம்மை பதிப்பகம்

2/141, கந்தசாமிநகர், பாலவாக்கம்,

சென்னை-600 041, தொலைபேசி 4927721

முதற்பதிப்பு : டிசம்பர், 1994

© நாரா நாச்சியப்பன்

விலை ரூ. 12.00

* * *

கவின்கலை அச்சகம்

கந்தசாமிககர்,

பாலவாக்கம் சென்னை-600 041.

முன்னுரை

இந்திய நாடெங்கும் இன்று சமூகநீதி வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவில் நீண்ட நெடு நாட்களாக முன்னேற வொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு தாழ்த்தப்பட்ட இனத்தாரும் மற்ற மேலாதிக்க இனத்தாரைப்போல் வாழ்க்கை உரிமைகளை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எழுச்சிக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.

ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகத்திலும், குஜராத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் இன்னும் எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வின் தாயகம் தமிழகமே! இந்த விழிப்புணர்வைத் தொடக்கத்தில் நாட்டில் உண்டாக்கியவர் தந்தை பெரியாரே!

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அரசியல் மேலாதிக்கமுடையவர்கள், தம்முடைய எல்லா ஆதிக்க சக்திகளையும் துணையாகக் கொண்டு, இந்த விழிப்புணர்வை ஒடுக்கிவிட முயல்வதையும் நாம் காண்கிறோம்.

பெருவாரியான மக்களிடையே பூத்துள்ள இந்த உரிமை உணர்வை ஒடுக்க நினைப்பவர்கள், தகுதி திறமையென்றெல்லாம் பேசி, தகுதியோ திறமை யோ இல்லாதவர்கள் கையில் எவ்வாறு பொறுப்பை ஒப்படைப்பதென்று வாதிப்பார்கள்.

தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்க சாதி யாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை நாட்டுமக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

உலக முழுவதிலும் கருப்பு இனத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு ஆடுமாடுகளோடு சேர்த்து விற்கப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.

அமெரிக்க நாட்டின் தலைவராக இருந்த ஆபிரகாம்லிங்கள் என்ற அருளாளர், கருப்பு இனத் தவரின் அடிமைத்தனத்தை யொழித்து, அவர்கள் உரிமைக்குப் போரிட்டதும், வெற்றி பெற்றதும் உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக் கப்பட்ட செய்தியாகும்.

இன்று அமெரிக்க நாட்டின் பெருமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள், ஒரு காலத்தில் அடிமைகளாக நடத்தப்பட்ட கருப்பர்களே! 

இசை மேதைகளாகவும் விளையாட்டு வீரர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், பேரறிஞர்களாக வும், உலகப் புகழ் பெற்றவர்கள் இன்று கருப்பு இனத்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆப்பிரிக்காக் கண்டத்து செனகால் நாட்டுத் தலைவர் செங்கோர், உலகத்தின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்கிறார்.

அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பும் வசதியும் கிடைத்துவிட்டால், அறிஞர்களாகவும் திறமையாளர்களாகவும் மிளிர முடியும் என்பதற்கு இவை நல்ல எடுத்துக் காட்டுகள்.

எத்தனையோ தடைகளையும், துன்பங்களையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறி, இந்தியாவில் ஈடு இணையற்ற சட்ட மேதையாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

தகுதியும் திறமையும் அடைய வாய்ப்பும் வசதியும் எல்லாருக்குமே கிடைக்க வேண்டும் என்பதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதிக் கோரிக்கையின் அடிப்படையாகும்.

சமூகநீதிக் கோரிக்கையின் தொடக்ககால நிலையை விளக்குவதே - இந்தக் ‘குருகுலப் போராட்டம்’

சமூகநீதியை நிலை நாட்ட பெரியார் தம் வாழ்வையே ஒப்படைத்துவிட்ட உறுதியை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிகிறோம்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாழும் உரிமை பெற்றவன் என்ற உரிமை யுணர்வைத் தட்டி எழுப்பிய பெரியார் இந்த நாட்டு மக்கள் அனைவரின் நன்றிக்கும் உரியவராவார்.

நாரா நாச்சியப்பன்

நன்றி

நான்கு வேதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து, சிந்து வெளித் தமிழகத்தின் சீர்மையை விளக்கி எழுதியவரும்

குத்துாசி குருசாமி வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும்,

அடிநாள் தொட்டு திராவிட இயக்கத் தொடர் புடையவரும் ஆகிய

தோழர் குருவிக்கரம்பை வேலு அவர்கள்

இந்நூல் முழுமையும் படித்துப் பார்த்து,

திருத்த வேண்டிய இடங்களைத் திருத்தி

நூல் செம்மையாக வெளிவர உதவினார்.

நான் எழுதும் ஒவ்வொரு நூலுக்கும் ஆதாரங்களைத் தேடித் தந்தும்,

கருத்துக் கூறியும்

தொடர்ந்து ஊக்கமூட்டியும் வரும்

தோழர் வேலு அவர்களுக்கு

என் மனம் நிறைந்த நன்றி.




பொருளடக்கம்

1. போருக்குள் ஒரு போர்

2. நாட்டுக் கல்வியின் தேவை

3. வார்தா முனிவரும் ஈரோட்டண்ணலும்

4. கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

5. திட்டுண்ணா என்ன நயினா?

6. காங்கிரஸ் செயற்குழுவில் கருத்துப் போராட்டம்

7. காந்தியடிகள் தடம் புரண்டார்

8. சமூக நீதியே சமநீதி

9. கோடானு கோடி இந்தியரின் வெற்றி முழக்கம்


போருக்குள் ஒரு போர்

குருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.

துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.

கண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.

நம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.

1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.

இளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக - தாழ்த்தப் பட்டவர்கள்; பின்தங்கியவர்கள் என்ற பெரும் பட்டியலில் இடம் பெற்று வரும் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வரலாற்றுச் செய்தி இது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளை இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்குள்ளே - நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் இது.

பாரதியார் இந்த நிலையை நன்கு உணர்ந்திருந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கி நடத்திய பெருந்தலைவர்கள் பலர் - எந்த ஆதிக்க மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதைப் பாரதியார் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பாரதியார் பாரத நாட்டின் விடுதலையைப்பற்றிப் பாடுகின்ற பாட்டைப் பார்த்தால் இது தெளிவாகப் புரிந்து விடும். {{block center|<poem> விடுதலை விடுதலை விடுதலை

பறையருக்கும் இங்கு தீயர் ⁠புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் ⁠மறவருக்கும் விடுதலை திறமை கொண்ட தீமையற்ற ⁠தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி ⁠வாழ்வம் இந்த நாட்டிலே!

விடுதலை–

ஏழையென்றும் அடிமையென்றும் ⁠எவனும் இல்லை சாதியில் இழிவுகொண்ட மனிதர்என்ப ⁠திந்தியாவில் இல்லையே வாழிகல்வி செல்வம்எய்தி ⁠மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர்ச ⁠மானமாக வாழ்வமே!

விடுதலை–

மாதர்தம்மை இழிவுசெய்பும் ⁠மடமையைக் கொளுத்துவோம் வையவாழ்வு தன்னில்எந்த ⁠வகையினும் நமக்குளே தாதர்என்ற நிலைமைமாறி ⁠ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக ⁠வாழ்வம் இந்தநாட்டிலே!

விடுதலை–

</poem>}} இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை பாடிப் பாருங்கள்.

பாரதியார் எந்த உணர்வோடு பாடினார். இந்த நாட்டில் விடுதலை எப்படி இருக்க வேண்டும்?

விடுதலையை யார் யார் பெற வேண்டும்?

என்றெல்லாம் தூய மனத்தோடு சிந்திக்கிறார் பாதியார்.

விடுதலைப் போராட்டத்தைத் தலைமை யேற்று நடத்தியவர்கள் இந்தத் தூய்மையான மனத்தோடு இருந்தார்களா?

மக்கள் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடம் இருந்ததா?

அவர்கள் எந்த மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதை இந்தக் குருகுலப் போராட்ட நிகழ்ச்சி வெளிக்காட்டி விட்டது.

மேலாதிக்க எண்ணமுடையவர்களின் முகத் திரையைக் கிழித்த தலைவர்களிலே பெரியாரின் பங்கு பெரும் பங்காகும்.

பெரியார் மட்டும் உறுதி படைத்தவராக இல்லாமல் இருந்திருந்தால், நாம் - தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பின்தங்கி யிருந்திருப்போம் என்று சொல்லவே முடியாது.

எச்சரிக்கையும் விழிப்புணர்வும் உள்ளவர்களாக தமிழ்மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்த இந்த நிகழ்ச்சியை நாம் இப்போது விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரையும் துச்சமென மதித்து, எத்தகைய சித்திரவதையையும் பொறுத்துக் கொண்டு, அன்னிய ஆதிக்கத்தின் கோரப் பிடிக்கு ஆட்பட்டு உயிர் துறந்த வீரப் பெரு மக்களின் இலட்சியக் கனவுகள் எல்லாம் பாழ்பட்டுப் போகாமல் காப்பாற்றிய பெருமை பெரியாருக்குத் தான் உண்டு.

சூது சூழ்ச்சி வஞ்சகம் பொறாமை ஆகியவற்றை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய பெரும் போராட்டம் தான் இந்தக் குருகுலப் போராட்டம்.

இதைத் தொடக்கத்திலிருந்து - ஆதியோடந்தமாக - இப்போது நாம் பார்க்கலாம்:

நாட்டுக் கல்வியின்

தேவை

இந்தியாவில் கல்வி நிலை எப்படி யிருந்த தென்று சிறிது நினைத்துப் பார்க்கலாம்.

குருகுலம் உருவான பின்னணி அப்போது தான் தெளிவாகத் தெரியும்.

ஐம்பத்தாறு நாடுகள் இருந்த காலத்தில், சிற்றுார்களிலே சில திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. பெரும்பாலும் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கும். சில ஊர்களில் பள்ளிக்கூடங்களே இருக்காது.

இந்தப் பள்ளிக்கூடங்களில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். சில சிறிய நூல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

இலக்கியங்கள், பெரிய நூல்கள் கற்ப தென்றால் அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கற்க வேண்டும். ஆசிரியர்க்கு மாணவர்கள் அடிமைத் தொண்டு புரிந்துதான் இந்த உயர் கல்வியைப் பெற முடியும்.

தொழில் துறைகளிலும் அப்படித்தான்.

ஒரு மருத்துவரிடம் போய்ப் பயிற்சி பெற வேண்டும் என்றால், அவருக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து அவர் மனமிரங்கிச் சொல்லித் தருவதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

தச்சு வேலை, உழவு வேலை இன்னும் பிற பிற தொழில் கல்விகளெல்லாம் கூட இப்படித்தான்.

எத்தனை அடிமைத் தொண்டு செய்தாலும், ஆசிரியர் மனம் வைத்தால்தான் மாணவனுக்குத் தொழில் நுட்பம் தெரிய வரும்.

பெரும்பாலும், தன் தொழிலைத் தன் குடும்பத்து வாரிசுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். வெளியிலிருந்து கற்க வருபவன் எவ்வளவு உண்மையாகத் தொண்டு செய்தாலும், ஆசிரியரால் வஞ்சிக்கப் படுவதுதான் பெரும்பாலான வழக்கம்.

ஆசிரியர் மனம் கனிந்து, கற்க வந்த மாணவன் மீது பரிவும் அன்பும் கொண்டு கற்றுக் கொடுத்தால் அவன் பயன் பெறுவான்.

நல்ல மனிதர்களும் இருந்ததால், தொழில் கல்வி தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது என்று சொல்லலாம்.

ஓர் ஆசிரியரை யடுத்து, அவருக்கு மனம் மகிழத் தொண்டு செய்து அடிமைகளாக இருந்தவர்கள், அவருக்குப் பிறகு, சிறப்பெய்தித் தாமும் சில அடிமைகளை உண்டாக்கும் செயலில் சங்கிலித் தொடர்போல ஈடுபட்டார்கள்.

இதைத்தான் குருகுல முறை என்று குறிப்பிடுவார்கள்.

துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக் கேட்ட கதை ஆசிரியர்கள் எவ்வளவு வஞ்சகமாகச் செயல் பட்டார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் நிலைத்த பிறகு தான் கல்வி நிலையில் மாறுதல் ஏற்பட்டது.

ஆங்கில நாட்டிலிருந்து அரசாங்கப் பொறுப்புகளை ஏற்க வந்த அதிகாரிகள், பெரும் இடர்ப்பாட்டுக்குள்ளானார்கள். நாட்டு மக்களிடம் தொடர்பு கொள்வது இடர்ப்பாடாயிருந்தது.

ஓர் ஊருக்கு அதிகாரியாக வந்தவன் அந்த ஊர் மக்கள் பேசும் மொழியை அறிந்து கொள்ள வேண்டியவனாக இருந்தான்; அல்லது துபாஷ் என்று சொல்லப்பட்ட மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.

ஏதாவது ஒரு காரியத்தை முன்னிட்டு அவனை வேறு ஒரு பகுதிக்கு மாற்றுவதாயிருந்தால், அவன் ஏற்கனவே கற்ற மொழி பயனற்றதாய் இருந்தது. மீண்டும் அவன் வேறொரு மொழியைக் கற்றுக் கொண்டால்தான், அவன் சிறப்பாகப் பணிபுரிய முடிந்தது.

பல மொழிகள் கொண்ட இந்த நாட்டில், அதிகாரிகளாக வந்தவர்கள் இவ்வாறு இடர்ப்பட்டதை யெல்லாம் எண்ணி, இந்திய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற லார்டு மெக்காலே என்பவர் ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்.

அரசாங்கத்தில் வேலைக்குச் சேரும் எல்லா இந்தியர்களும் ஆங்கில மொழி பயின்று கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். இதனால் இலண்டனிலிருந்து வரும் அதிகாரிகள் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களாய் இருந்தால் போதும்.

அவர்களை எந்தப் பகுதிக்கும் நினைத்தவுடனே மாற்றலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியர்கள் ஆங்கிலம் கற்பதற்காகப் பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

அரசாங்க வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பல இந்தியர்கள் இந்தப் பள்ளிக்கூடங்களில் பயின்றார்கள்.

பயின்று தேர்ந்தவர்களுக்கு, அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி பல வேலைகள் கிடைத்தன.

ஆங்கிலப் படிப்பினால் பல நன்மைகள் ஏற்பட்டன.

லார்டு மெக்காலே கணக்கர்களை உருவாக்குவதற்காகத் தொடங்கிய இந்தப் பள்ளிகள் ஆங்கிலத்தையும் கணக்கையும் மட்டுமே சொல்லிக் கொடுக்க வில்லை. வரலாறு, புவியியல், விஞ்ஞானம், வானியல், ஆட்சியியல் போன்ற புதுமைக் கல்விகளையும் கற்றுத் தந்தன.

இதனால் புத்தறிவும், பொது நோக்கும் உலக யல் அறிவும் ஏற்பட்டன என்று கூறலாம்.

ஆங்கிலக் கல்வியினால் பல கேடுகளும் உண்டாயின.

ஆங்கிலம் படித்து அரசாங்க வேலை பெற்றவர்கள், தங்களை ஓர் உயர்ந்த சாதியாராக எண்ணிக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த சிறிய அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தங்கள் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரிய கொடுமைகளை இழைத்தார்கள்.

‘கருப்புத் துரைகள்’ என்ற பட்டத்தையும் பொதுமக்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

தாங்கள் செய்வது அடிமை வேலை என்பதை மறந்து விட்டு, தாய் நாட்டு மக்களை அடிமைகளாக நடத்திக் கொடுமைப் படுத்தினார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்ட இந்த மூடத்தனமான கொடுமை, இன்றைக்கும் இந்திய நாட்டின் அதிகார வர்க்கத்தாரிடம் குடி கொண்டிருப்பது மிக வேதனையளிப்பதாய் உள்ளது.

நாடு விடுதலை பெற்று மூன்று தலை முறை காலம் கடந்தும் அதிகாரிகளிடம் இந்த மனப்பான்மை ஒழியவில்லை என்பதை, நாட்டுத் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பொல்லாங்கை ஒழிக்க வல்ல திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயலாற்றவும் பின் வாங்கக் கூடாது.

ஆங்கிலம் படித்தவர்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் இன்னும் ஒழியவில்லை. ஆங்கில மொழியின் மீதுள்ள மோகம் இன்னும் தனியவில்லை. தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்சி மொழியில் தான் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்களிடமிருந்து இன்னும் போகவில்லை.

ஆங்கிலம் போய் விட்டால் எல்லாம் முழுகிப் போய்விடும் என்ற தவறான எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து இன்னும் போகவில்லை.

காமராசர், பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள், ஆங்கிலம் இல்லாமலே பெருஞ் சாதனைகளை நடத்திக் காட்ட முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிய பிறகும், இந்த அதிகாரவர்க்கம் திருந்த வில்லை என்பது வேதனைக்குரியது.

இந்த அடிமை எண்ணம் மாறினால் தான் நாம் உண்மையான விடுதலையைக் காண முடியும்.

ஆங்கிலக் கல்வியால் இன்னொரு கேடு ஏற்பட் டது. அரசாங்கம் நடத்திய பள்ளிகள் சில வென்றால், பாதிரியார்கள் நடத்திய பள்ளிக்கூடங்கள் பத்து மடங்காய் இருந்தன.

இந்தப் பள்ளிகளில் படிக்கப் போனவர்கள், மதம் மாறினார்கள்; அல்லது மாற்றப்பட்டார்கள்.

பாதிரியார்கள் அஞ்ஞானிகளை யெல்லாம் மெய் ஞானிகள் ஆக்குகிறோம் என்று சொல்லி ஞானஸ் நானம் செய்து கிறித்தவ மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

கிறித்தவ மதத்தில் சேர்ந்தவர்கள், கிறித்தவப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு புது வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்.

பாதிரிமார்கள் அஞ்ஞானிகளை மெய்ஞ்ஞானிகளாக்கினார்களோ இல்லையோ, மனிதர்களாக்கினார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஏனெனில், நாட்டு முதுகெலும்பு போன்ற ஏழை மக்கள் சாதிக் கொடுமையால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு விலங்குகளினும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.

மதம் மாறிய இந்த மக்களுக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்த நிலையில் நாட்டுத் தலைவர்கள் பலர் வெள்ளைக்காரனின் கல்வி முறையை மாற்றி நம் நாட்டுப் பண்போடு கூடிய கல்வியை வளர்க்க வேண்டு மென்று கருதினார்கள்.

நாட்டுத் தலைவர்கள் மனத்திலே இந்த எண்ணம் அரும்புவிட்டுக் கொண்டிருந்தது.

அடிமைக் கல்வியான ஆங்கில முறைக் கல்வியை மாற்றி, உரிமைக் கல்வியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நாட்டுத் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

அந்தக் கல்வி முறை காந்திய வழியில் அமைய வேண்டும் என்றே பலரும் கருதினார்கள்.

காந்திய வழி என்பது என்ன?

அதை யறிந்து கொள்ள நாம்

மகாத்மாகாந்தி என்றும் காந்தியடிகள் என்றும் போற்றப்பட்ட

நாட்டுத் தந்தையாக விளங்கிய

இந்திய மக்கள் அனைவருக்கும் இலட்சிய வழி காட்டியாக விளங்கிய காந்தி அண்ணலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

வார்தா முனிவரும்

ஈரோட்டண்ணலும்

காந்தியடிகள் வழக்கறிஞர் தொழிலுக்காக தென்னாப்பிரிக்கா சென்றார் என்பது யாவருக்கும் தெரியும்.

அங்கு வெள்ளையர்கள் கருப்பு இனத்தவரை எவ்வளவு கேவலமாக நடத்தி வந்தார்கள் என்பதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறே தக்க சான்றாகும்.

ஒரு வெள்ளையன் அறைந்த அறையில் காந்தியடிகளின் பல் உதிர்ந்து விழுந்த தென்றும் அன்று முதல் அவர் பொக்கை வாயராகி விட்டார் என்பதும், அந்தப் பொக்கை வாய்ப் புன்சிரிப்பே மனங்கவரும் தோற்றத்தைக் காந்தியடிகளுக்கு அளித்தது என்பதும் நாம் அறிந்ததே!

காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான், தான் அதுவரை கவனிக்காத ஒன்றைக் கவனித்தார்.

வெள்ளையர்கள் கருப்பர்களிடம் காட்டும் அந்தக் கொடுமையான போக்கை இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு பிரிவாரைப் பிரித்து வைத்துக் கொடுமைப்படுத்தி வாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

பள்ளர் என்றும் பறையர் என்றும் புலையர் என்றும் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் ஒரு பெரும் கூட்டத்தார் மேல்சாதிக்காரர்களால் இழிவாக நடத்தப்படும் கொடுமையை அந்நாள்வரை தான் கவனிக் காதிருந்துவிட்ட தவறை உணர்ந்தார். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உழைக்க-போராட முன்வந்தார். இந்தியர்களிடையே உள்ள எல்லாப் பிரிவாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கருதி அன்று முதல் தாழ்ந்தப்பட்ட இனமக்களுக்காக உழைக்கத் தொடங்கினரர்.

தீண்டாமை ஒழிப்புக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை அங்கங்கே நடத்த ஊக்க மூட்டினார்.

சாதி யொழிப்புக்காக கலப்பு மணங்களை ஆதரித்தார்.

சாதி ஒழிப்பு உணர்வு மக்களிடையே உண்டாவ தற்காக சமபந்தி விருந்துகள் நடைபெறச் செய்தார்.

காந்தியடிகளின் சீடர்கள் - காங்கிரசுக்காரர்கள் இந்தப் போராட்டங்களிலே ஈடுபட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க முனைந்தனர்.

தமிழ் நாட்டிலே காங்கிரசுக் கட்சியின் துரண்களாகவும், மக்கள் போற்றும் தலைவர்களாகவும் விளங்கியவர்கள் மூன்று மணிகள் - ஒப்பற்ற பொன் மணிகள்.

சேலம் வரதராசுலு நாயுடு.

திருவாரூர் கலியாண சுந்தர முதலியார்.

ஈரோட்டு இராமசாமி நாயக்கர்.

இந்த மூன்று பேருடைய அயராத உழைப்பால் தான் தமிழ் நாட்டில் நாட்டுணர்வு வளர்ந்தது. மக்களிடையே விடுதலை உணர்வு மலர்ந்தது.

அடிமைத்தனத்தை யொழிக்கவும், மக்களி டையே நிலவிய வேற்றுமை யுணர்வுகளைக் களையவும், தன்னலம் பாராது அயராது உழைத்து வந்தவர்கள் இந்த மூன்று தலைவர்கள்.

மூன்று பேரும் காந்திய வாதிகள். காந்தியடிகள் என்ன சொன்னாலும் உடனே செயல் வடிவில் நடத்திக், காட்டும் செயல் வீரர்களாக விளங்கினார்கள்.

நாயுடு, நாயக்கர், முதலியார் நமது தலைவர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களிடையே விளங்கியது.

தன்னுடைய செயல் திட்டங்கள் ஒவ்வொன்றும், உடனுக்குடன் நிறைவேறுவது தமிழகத்தில் தான் என்ற எண்ணம் காந்தியடிகளுக்கு உள்ளத்தில் ஊறிவிட்டது.

அதனால், தமிழ் நாட்டின்பால் அவருக்குத் தனி மதிப்பு ஏற்பட்ட தென்றே சொல்ல வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழர்கள் அவரைத் தெய்வமாகவே மதித்தார்கள்.

அவருடைய வாய்ச்சொல் ஒவ்வொன்றும் தெய்வ கட்டளையாகவே மதிக்கப்பட்டது.

தமிழ் நாட்டு மும்மணிகளிலே, தமிழ் மக்கள் பெரிதும் போற்றியது ஈரோட்டு அண்ணலைத்தான். அந்த ஈரோட்டாரோ வார்தா முனிவரின் வாய்ச் சொல் ஒவ்வொன்றுக்கும் செயல்வடிவம் கொடுத்த தீவிரவாதியாக விளங்கினார்.

கள்ளுக்குடிப்பதால் ஏழை மக்களின் குடும்பங்கள் சிதைந்து போகின்றனவே என்று வார்தா முனிவராகிய காந்தியடிகள் வருந்திப் பேசினால்,

கள்ளுக்கடை மறியல் நடத்தி - குடிப்பதை நிறுத்துங்கள் என்று போராட்டம் நடத்துவார் ஈரோட்டு ஏந்தல்.

கள்ளிறக்குவதைத் தடுப்பதற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டித் தள்ளிவிட்டார் ஈரோட்டார்.

கதர்த்துணி யணிவதால் இந்த நாட்டின் ஏழை மக்களைக் காப்பாற்ற முடியும் என்று காந்தி மகான் கூறினால், கதர்த்துணி மூட்டைகளைத் தோளிலே சுமந்து சென்று தெருத் தெருவாகக் கூவி விற்று வருவார் ஈரோட்டார்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வார்தாவில் ஆணை பிறந்தால், கோவிலுக்குள்ளே ஆதிதிராவிடர்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைவார்.

வைக்கத்திலே தீண்டாமை யொழிப்புப் போராட் டம் நடக்கிறது; எங்களை உள்ளே தள்ளிவிட்டார்கள் என்று மலையாளத் தலைவர்கள் கடிதம் அனுப்பினால், காய்ச்சலையும் வயிற்று வலியையும் மறந்து பறந்து சென்று போராடி வெற்றியை நிலை நாட்டுவார். வைக்கம் வீரர் என்றும் பேரெடுப்பார்.

சாதியை யொழிக்க வேண்டும் என்று காங்கி ரசிலே தீர்மானம் போட்டால் சமபந்தி விருந்துகள் நடத்துவார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்று காந்தியடிகள் சொல்லிவிட்டால், இதோ என்று முன்னோடியாக விளங்குவார் ஈரோட்டார்.

இப்படி எள் என்று சொல்லும் முன்னாலே எண்ணெயாக நின்று செயலை முடித்து விடுவார்.

காந்தியடிகளின் சீடராகவும் - மக்கள் தொண்ட ராகவும் விளங்கிய ஈரோட்டுப் பெரியார், மனங் கொதித்துப் போராடும்படியான நிகழ்ச்சி யொன்று தமிழகத்திலே நடந்தது.

அதுதான் குருகுலப் போராட்டமாக வெடித்தது!

கலாச்சாரத்தைக் காக்க

ஒரு குருகுலம்

திருச்சிராப்பளிள்ளியின் ஒரு பகுதி வரகனேரி.

வரகனேரியில் வேங்கேடச ஐயர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இவருடைய தொழில் வட்டித் தொழில். செட்டியார்கள் செய்ய வேண்டிய வட்டித் தொழிலை வேங்கடேச ஐயர் திறமையாகச் செய்து நல்ல பலன் கண்டார்.

சாஸ்த்திரப்படி பார்ப்பனர்கள் செய்யக் கூடாத தொழில்தான்! அதைப் பார்த்தால் முடியுமா?

வேங்கடேச ஐயருக்கு இந்து மதத்தில் தீவிர மான பற்று இருந்தது. திருச்சி வட்டாரத்தில் பாதிரிமார்கள் செய்த மத மாற்றங்களைக் கண்டு இவர் மனம் கொதித்தார். பல படித்த பார்ப்பனர்களே மதம்மாறியது பெரும் வருத்தமளித்தது. மத மாற்றம் செய்து கொண்ட ஆட்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாறும்படி அவர் வற்புறுத்தினார். அவர்கள் மீண்டு வர ஒப்புக் கொண்டாலும், திருச்சியில் இருந்த பார்ப்பன சாஸ்திரிகள் அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொள்ளவிலலை. ஒருமுறை மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துக்களாக விதியில்லை என்று கூறிவிட்டார்கள். வேங்கடேச ஐயர் நேரே காஞ்சிபுரம் சென்றார்.

காமகோடி பீடத்தின் தலைவராகிய அன்றைய சங்கராச்சாரியாரைச் சந்தித்தார். மதம் மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திலே சேர்த்துக் கொள்ள காமகோடி பீடம் அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். சங்கராச்சாரியார் ஒப்புக் கொள்ள வில்லை. புனர் உபநயனம் செய்ய சாஸ்திரத்தில் இடமில்லை என்று மறுத்துவிட்டார்.

வேங்கடேச ஐயர் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். சங்கராச்சாரி யாரைக் காட்டிலும் தீவிர இந்து மதப் பற்றாளரான வேங்கடேச ஐயரின் மகன் தான் சுப்பிரமணிய ஐயர்.

சுப்பிரமணிய ஐயர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துத் தேர்ந்தார். ஆங்கிலேயர் ஒருவருக்குத் துணையாளராக இரங்கூன் சென்று, அங்கிருந்து, மேற்படிப்புக்கு இலண்டன் சென்றார்.

இலண்டனில் பாரிஸ்டர் படிப்புக்காகச் சென்ற சுப்பிரமணிய ஐயர், சைவ உணவுக்காக இந்தியா விடுதிக்குச் சென்று அங்குள்ள தீவிரவாதிகள் அணியில் சேர்ந்தார். தசராப் பண்டிகை விழாவுக்கு காந்தியடிகளைத் தலைமை தாங்க அழைத்த போது, கரந்தியடிகளைத் தீவிரவாதியாக மாற்ற முடியும் என்று எண்ணிய சுப்பிரமணிய ஐயர், பிற்காலத்தில் காந்தியடிகளின் அஹிம்சை வழியே சிறந்த தென்ற முடிவுக்கு வந்தார். காந்தியடிகள்தான் அவரைத் தன் வழிக்கு மாற்றினார்.

சுப்பிரமணிய ஐயர் பாரிஸ்டர் ஆகவில்லை. அவருடைய இலட்சியமெல்லாம், புரட்சிக்காரராக மாற வேண்டும் என்பதே. காந்தியடிகளால் மன மாற்றம் பெற்ற பின் - அகிம்சாவாதியான பிறகு அவர் அமைதியாகத் தொண்டு புரியத் தொடங்கினார்.

ஐயர், வேதம் உபநிடதம் ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர். திருக்குறளை ஐயம் திரிபறக் கற்றவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கம்பனின் கவித்திறம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் நூலும் ஒப்பற்றன.

ஆங்கிலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நூல் எழுதியுள்ளார். இது மிகச் சிறந்த நூலாகும். பல மொழிகளில் பயிற்சி பெற்றவர்.

தம் இறுதிக் காலத்தில், பாரத கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘குருகுலம்’ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டார்.

காந்திய வாதியான ஐயர், தமிழகத்துச் சான்றோர்களிலே ஒருவராக மதிக்கப்பட்டார். சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கருத்துரைத்து வந்தார். அரவிந்தர் பாரதியார் போன்றவர்கள் போற்றும்படியான நிலையில் இருந்தார்.

நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்ட ஐயர் ஆங்கிலம், தமிழ், வடமொழி, இலத்தின் ஆகிய பண்டைய மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஐயர் நாட்டிற்காகப் பல இன்னல்களை ஏற்றுக் கொண்ட ஐயர்.

இந்த நாட்டின் பண்பாட்டு அடிப்படையில் ஒரு குருகுலம் காண வேண்டும் என்று முனைந்தபோது, அதைத் தமிழகத்தில் உள்ள எல்லாத் தலைவர் களுமே வரவேற்றனர். அதற்கு நல்ல ஆதரவும் தர முன் வந்தனர்.

ஆனால் ஐயர் தொடங்கிய குருகுலம் ஒரு போராட்டத்திற்குக் காரணமாய் அமைந்துவிட்டது. வரகனேரி சுப்பிரமணிய ஐயர் என்ற பெயரைச் சுருக்கி வ.வே. சு. ஐயர் என்றுதான் பலரும் குறிப்பிடுவார்கள்.

ஐயர் காந்திய வாதியாக இருந்து பல புரட்சிக் கருத்துக்களைப் பேசுவார். சாதிவேற்றுமை கூடா தென்பார். ஆதிதிராவிடர்களுக்கும் வேதம் சொல்லிக் கொடுத்து பூனூல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கி விட்டால் வேற்றுமை ஒழிந்து விடும் என்பார். வான்மீகியை விட கம்பன் உயர்ந்த புலவன் என்று கட்டுரைகள் வரைவார். இருந்தாலும் ஆசாரங்களைக் கைவிடாமல் ஒரு ரிஷி போல வாழ்ந்து வந்தார். அதனால் அவரோடு நெருங்கிப் பழகிய வர்கள் மகரிஷி வ.வே.சு. ஐயர் என்று பெருமையாகக் குறிப்பிடுவார்கள்.

ஐயர் சொற்பொழிவாற்றும் போது தாம் ஒரு குருகுலம் அமைக்க விரும்புவதாகக் குறிப்பிடுவார். இதற்கு எல்லாரும் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.

ஐயர் ஒரு முறை கல்லிடைக் குறிச்சிக்குப் போயிருந்தார். அங்கே யிருந்த ஆசிரியர்கள் ஐயரைச் சந்தித்தார்கள்.

அவர்கள் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள். அதனால் கல்லிடைக்குறிச்சி தாலுக்கா போர்டு பள்ளியிலிருந்து வேலையை விட்டு விலகி விட்டார்கள்.

விலகிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறு பள்ளிக்கூடம் தொடங்கினார்கள்.

அதற்கு “திலகர் வித்தியாலயம்” என்று பெயரிட்டார்கள். அய்யர் கல்லிடைக் குறிச்சி சென்ற போது, குருகுலம் நடத்த வேண்டும் என்ற அவருடைய ஆசையை அறிந்த ஆசிரியர்கள், தங்களால் தொடர்ந்து நடத்த முடியாத “திலகர் வித்தியாலயத்தை” ஐயரை எடுத்து நடத்துமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.

பெரிய அளவில் திட்டம் போட்டிருந்த ஐயர், அவர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார்.

திலகர் வித்தியாலயத்து மாணவர்கள், தினந்தோறும் காலையில் தெருவில் பாட்டுப் பாடிக் கொண்டு வீடு வீடாகச் சென்று அரிசி வாங்கி வருவார்கள். சில இடங்களில் காய்கறியும் கிடைக்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சோறுகிடைத்து விடும். வசதியுள்ள மாணவர்கள் கொடுக்கும் பள்ளிக் கூடச் சம்பளம் ஆசிரியர்களின் சம்பளத்துக்குப் பயன்படும்.

அக்காலத்தில் பல ஊர்களில், பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் நடந்தன.

படிக்க வரும் பிள்ளைகள் அவரவர் வீட்டிலிந்து ஒவ்வொரு பிடி அரிசி கொண்டு வந்து ஆசிரியருக்குக் கொடுப்பார்கள்.

அவற்றைப் பிடி அரிசிப் பள்ளிக்கூடம் என்று சொல்லுவார்கள்.

திலகர் வித்தியாலயத்தை நடத்திக் கொண்டே ஐயர், பல ஊர்களில் குருகுலம் கட்டுவதற்குப் பெரிய இடம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

திருநெல்வேலியை அடுத்த சேரமாதேவியில் ஒருவர் தமது முப்பது ஏக்கர் நிலத்தை விற்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஐயர் அந்த நிலத்தைப் போய்ப் பார்த்தார். முப்பது ஏக்கருக்கும் ரூபாய் மூவாயிரம் விலை சொன்னார்கள்.

ஐயர் அந்த முப்பது ஏக்கர் நிலத்தை எப்படி யாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.

பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தான் என்ற ஊரில் வயி. சு. சண்முகனார் என்ற இலட்சிய வாதி ஒருவர் இருந்தார். அவர் காந்தியடிகளிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்.

காந்தியடிகள் தென்னாடு வந்த போது தம்முடைய இன்ப மாளிகை என்ற பெரிய பங்களாவில், காந்தியடிகளையும், அவருடன் வந்தவர்களையும் அழைத்து வந்து ஒரு வாரம் வரை தம் விருந்தினராக உபசரித்து மகிழ்ந்தவர்.

காந்தியடிகள் அவருடைய பொது நல ஈடுபாட்டைக் கண்டு, தம்முடன் சேர்ந்து தொண்டாற்றுமாறு அன்புடன் அழைத்தார்.

சண்முகனார் அடிகளின் அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாதபடி சில நீதிமன்ற வழக்குகள் தடுத்தன. காந்தியடிகள் அவற்றை யெல்லாம் உதறித் தள்ளி விட்டுத் தம்முடன் வந்து பொதுப் பணி செய்யுமாறு அழைத்தார்.

முழுநேர உழைப்பை நல்கா விட்டாலும் நாட்டு விடுதலைக்காக சண்முகனார் தம்மால் இயன்ற மட்டும் உழைத்தார்.

பிற்காலத்தில் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி யிருப்பதைக் கண்டும், காந்தியடிகள் அதிலிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய காலத்தில், சண்முகனாரும் வெளியேறினார். பின்னால் சண்முகனார், பெரியாரின் தொண்டராகி தன்மான இயக்கத்தை நாடெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

பாரதியார், பாரதிதாசன் ஆகிய கவிஞர் பெரு மக்களுக்குச் சண்முகனார் பல முறை ஆதரித்து உதவியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சண்முகனாரின் கண்களில் ஐயரின் அறிவிப்பு வேண்டுகோள் தெரியவந்தது.

காந்தியவாதியான ஐயர், காந்தியடிகளின் நெறி முறையில் குருகுலம் நடத்துவார் என்று எண்ணிய சண்முகனார், சற்றும் காலம் தாழ்த்தாது குருகுலம் அமைக்க நிலம் வாங்குவதற்கு வேண்டிய தொகை மூவாயிரத்தையும் உடனடியாகக் கொடுத்து உதவினார்.

நிலம் வாங்கிய உடனே கட்டிடங்கள் கட்டுவதற்கும், பிற செலவுகளுக்கும் ஆயிரமும் நூறுமாகப் பல தமிழ்ப் பெருமக்கள் கொடுத்து உதவினார்கள்.

மளமள வென்று குருகுல வேலைகள் நடந்தன. கல்லிடைக் குறிச்சிப் பள்ளிக்கூடமும் குருகுலத்துடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. புதிய மாணவர்கள் பலர் சேர்ந்தனர்.

குருகுலம் ஒரு இலட்சியப் பள்ளிக்கூடம். ஓர் இலட்சியவாதியான வ.வே.சு ஐயர் தலைமையில் இயங்குகிறது. எனவே தேசீய வாதிகள் பெரிய எதிர் பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளைக் குருகுலத்தில் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

ருருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் இலட்சியத் தலைவர்களாகப் பரிமளிப்பார்கள் என்ற எண்ணம் நாடெங்கும் உள்ள தேசீய வாதிகளின் உள்ளங்களில் ஒரு புதிய கனவைத் தோற்றுவித்தது.

சாதிபேத மற்ற, சமத்துவ மனப்பான்மையுள்ள, ஒன்றுபட்ட குடிமக்களை உருவாக்கும் ஓர் அமைப்பு உருவாகி விட்டதென்ற களிப்பில் நாட்டுத் தலை வர்கள் இருந்தார்கள்.

வ.வே.சு.ஐயர் நாட்டுக் காங்கிரஸ் செயற் குழுவுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். தேசீயக் குருகுலத்துக்கு நிதி உதவி செய்யுமாறு அந்த விண்ணப்பம் கேட்டுக் கொண்டது.

அடுத்துக் கூடிய செயற்குழுவில் இவ் விண்ணப்பம் ஆலோசனைக்கு வைக்கப்பட்டது.

1925ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவராக வரதராசுலு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட் டிருந்தார். அதற்கு முந்திய இரண்டு ஆண்டு தலைவராக இருந்த பெரியார் அந்த ஆண்டு செயலாளராக இருந்தார். மற்றொரு செயலாளராக இருந்தவர் கே. சந்தானம். செயற்குழு உறுப்பினராக இருந்தவர்கள்

திரு விக

எஸ். இராமநாதன்

இரத்தினசாமிக் கவுண்டர்

இராமச்சந்திரன் செட்டியார்

சிங்காரவேலுச் செட்டியார்

தங்கப் பெருமாள்

ஆதிநாராயணன் செட்டியார்

ஒ. பி. இராமசாமி ரெட்டியார்

இராசகோபாலாச்சாரி

சாமிநாத சாஸ்திரி

டி.எஸ்.எஸ். ராஜன்

ஹாலாஸ்யம் ஐயர்

என்.எஸ். வரதாச்சாரி

அப்பாராவ்

வி. கிருஷ்ணமாச்சாரி

குருகுலம் ஒரு தேசீய நிறுவனம். எனவே அதன் வளர்ச்சிக்கு காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்குவதென்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. முதல் பகுதியாக ரூபாய் ஐயாயிரம் வழங்குவதாகவும், சிறிது காலங்கழித்து ஐயாயிரம் கொடுப்பதாகவும் செயலாளர் பெரியார் அறிவித்தார். உடனடியாகக் காங்கிரஸ் பணத்திலிருந்து ரூபாய் ஐயாயிரத்துக்கு செக் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில் மலேயா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக் குறைய முப்பதாயிரம் ரூபாய் வசூலித்துக் கொடுப்ப தென்றும் தெரிவிக்கப்பட்டது. தீர்மானித்தபடி பெரியார் உடனடியாக ஐயாயிரம் ரூபாய்க்குச் செக் கொடுத்துவிட்டார்.

குருகுல வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியது. காங்கிரசே பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறது என்றவுடன் நாட்டுணர்வு படைத்த பல செல்வர்கள் நிதிஉதவி வழங்கினார்கள்.

ஆனால், மிகக் குறுகிய காலத்தில் வ.வே.சு ஐயர், மக்கள் நல்லெண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டு விட்டார்.

பாரத அன்னையின் அடிமை விலங்கை யொடித்தெறியப் பாடுபட்ட இளந் தொண்டர்கள் ‘நவபாரதம்’ எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்களோ, அந்தக் கனவை யெல்லாம் குலைப்பதாக இருந்தது. குருகுலத்தில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சிக்காக வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில், அதுதான் சரியென்று வாதிட்டார் அய்யர்.

அய்யர் செய்தது சரியென்று வாதிட்டார்கள். இராசாசி போன்ற அன்றைய பார்ப்பனத் தலைவர்கள்.

தீட்டுண்ணா

என்ன நயினா?

ஒமாந்துர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர். பழுத்த காந்திய வாதி. கடைசி வரை காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர். எளிமையான தோற்றமுடையவர். எப்பொழுதும் தூய வெள்ளைக் கதராடையே அணிவார். ஆடையைப் போலவே தூய வெள்ளை மனம் படைத்தவர். 1948ஆம் ஆண்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆட்சிக் காலம் தமிழக காங்கிரஸ் ஆட்சி யின் பொற்காலம் என்று கூற வேண்டும். ஏனெனில் அவருடைய ஆட்சியில் தான் எவ்வித ஊழலுமற்ற ஒரு செம்மையான அரசு நடந்தது.

அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இராமசாமி ரெட்டியார் பல ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் செயற் குழுவில் உறுப்பினராக இருந்தார். இராமசாமிப் பெரியாருக்கும், வரதராசுலு நாயுடுவுக்கும், திரு விக வுக்கும் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தார். இந்த முப்பெருந் தலைவர்களுக்கும் ஒத்துழைக்கும் சிறந்த தொண்டராக விளங்கினார்.

நம் பண்டைய பெருமையைக் காப்பாற்றுவதற்கென ஏற்பட்ட குருகுலத்தில், வெள்ளையர் கலாச்சாரம் நுழைய முடியாத குருகுலத்தில், தன் பிள்ளையும் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆங்கிலக் கல்வியின் தீமையை மேடையில் பேசிக் கொண்டே தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கான்வென்டுக்கு அனுப்பும் இக்காலத் தமிழர் தலைவர்கள் போலில்லாமல் தன் பிள்ளையை பாரதக் கலாச்சார முறைக் கல்வி பயில குருகுலத்தில் சேர்த்து விட்டார்.

பையன் பள்ளியில் பயின்றான். ஆறு மாதங்கள் ஓடின. அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டது. பிள்ளைகள் தத்தம் பெற்றோரைப் பார்க்கச் சொந்த ஊருக்குப் போய் வர அனுமதிக்கப் பட்டார்கள்.

ஒமாந்துரார் பையனும் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

கட்சி வேலைகள், தொண்டு, மாநாடு என்று பல நாள் வெளியூர்களிலே சுழன்றுகொண்டிருந்த இராமசாமி ரெட்டியார் வீட்டில் ஒய்வாக இருந்த ஒரு நாளில் தன் மகனோடு பேசத் தொடங்கினார்.

பையனின் படிப்பு எப்படி யிருக்கிற தென்று விசாரிக்கத் தொடங்கினார்.

அவன் மூலம் குருகுலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிந்து கொண்டார்.

குருகுலத்தின் தினசரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டார்.

அவருடைய கேள்விகளுக்கு மகன் அளித்த பதில் மூலம் அவர் தெரிந்து கொண்ட செய்திகள் பல.

காலையில் 4 மணிக்கு எழுப்பி விடுவார்கள். கை கால் முகம் கழுவி பல் விளக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உடற் பயிற்சி நடக்கும்.

உடற் பயிற்சி முடிந்ததும் மலங்கழிக்கச் செல்ல வேண்டும். செல்லும் போது மண் வெட்டியுடன் போய் ஒரு குழி வெட்டி, அதில் மலங்கழித்த பின் மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும்.

குளித்து முடித்த பின் காலை 7-30மணிக்கு ஒரு பெரிய கூடத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும், கூட வேண்டும். பார்ப்பன மாணவர்கள் ஒரு பக்கத்திலும், மற்ற மாணவர்கள் இன்னொரு பக்கத்திலும் நிற்பார்கள். தெய்வ வழிபாடு நடக்கும். ஐயர் பல பெரியோர்களின் வரலாறுகளைக் கூறுவார். புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார். ஒருமணி நேரம் கழிந்தபின் மாணவர்களுக்கு காலை உணவாக கஞ்சி வழங்கப்படும்.

உழவு வேலை, தோட்ட வேலை, சமையல் வேலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பிரித்துவிடப்படுவார்கள். நெல் பயிரிடப்பட்டிருந்தது. காய்கறிகள், பழ மரங்கள் வளர்க்கப் பட்டன. இவற்றில் எல்லாம் மாணவர்கள் ஈடு படுத்தப்பட்டார்கள்.

பள்ளிக் கூடத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டும் வேலை நடக்கும். இதில் மாணவர்கள் கொத்தனார்களுக்கு செங்கல் எடுத்துப் போதல், சாந்து குழைத்தல் போன்ற வேலைகள் செய்வார்கள்.

மற்ற ஆங்கிலப் பள்ளிக் கூடங்கள் போலவே, வரலாறு, சமூகநலம், பூகோளம், விஞ்ஞானம் எல்லாப் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தமிழும், சமஸ்கிருதமும், இந்தியும் கற்றுத்தரப்பட்டன. பயிற்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது. இந்த விவரங்களை யெல்லாம் கேட்ட போது ரெட்டியாருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. பிள்ளைகள் வேற்றுமையின்றி எல்லா வேலையும் செய்வது எளிமையான வாழ்வுக்கு வழி வகுப்பதாகும் என்று மகிழ்ச்சி யடைந்தார்.

ஆங்கிலம்தான் பயிற்சி மொழி என்று மகன் சொன்னபோது தேசிய உணர்வுள்ள ரெட்டியார் துடித்துப் போனார். ஆனால், கால நிலையை ஒட்டி, வேறு அரசு பள்ளி மாணவர்களோடு போட்டி வரும் போது சரி சமமாக நிற்க உதவியாயிருக்கும் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார். இந்தி தேசிய மொழி அதைக் கற்றுக் கொள்வது நல்லது என்று எண்ணினார். சமஸ்கிருதம் இலக்கிய மொழி அதுவும் தேவை தான் என்று எண்ணினார். இந்தப் படிப்புகளில் பாரதக் கலாச்சாரம் எங்கே யிருக்கிறது, மற்ற பள்ளிக்கூடங்கள் போலத்தானே இருக்கிறது என்று எண்ணமிட்டார்.

‘சாப்பாடு நன்றாய் இருக்கிறதா?’ என்று தந்தையார் கேட்க, மகன், ‘பழகிக் கொண்டு விட்டேன்’ என்று சொன்னான்.

“பள்ளிக்கூடம் எப்போது திறக்கிறார்கள்?” என்று தந்தையார் கேட்டபோது, “நயினா, நான் அங்கே போகவில்லை; வேறு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன்!” என்றான்.

எல்லாம் நன்றாகத் தானே சொன்னான். ஏன் போகமாட்டேன் என்கிறான். தாய்ப் பாசமா? வீட்டு நினைப்பா? என்று எண்ணினார் ரெட்டியார்.

“என்னடா, செப்புறே?” என்று கேட்டார்,

“எங்களை யெல்லாம் கேவலமா நடத்துறாங்க நயினா!” என்றான் பையன்.

“உழவு வேலை செய்கிறது கேவலமா? கட்டட வேலை செய்வது கேவலமா? எல்லாத் தொழிலும் கற்றுக் கொள்ள வேண்டும்! தொழிலில் வேற்றுமை பார்க்கக் கூடாது” என்றார் ரெட்டியார்.

“அதைச் சொல்லவில்லை நயினா? நாங்கள் எல்லாம் சூத்திரப் பசங்களாம். பிராமணப் பசங்களுக்குத் தனியா சாப்பாடு போடுறாங்க. அவங்களுக்குச் சோமவாரம் சுக்கிரவாரம் கார்த்திகை இப்படி நாள் கள்ளே வடை பாயாசத்தோடு சாப்பாடு, எங்களுக் கெல்லாம் எப்பொழுதும் ஒரே மாதிரி சோறும் சாம் பாரும்தான்.

“ஒருநாள் தண்ணிர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன். அது பிராமணப் பசங்க பானையாம். நான் தொட்டதும் தீட்டாகிப் போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார், பாதித் தண்ணிர் குடித்துக் கொண்டிருக்கும் போதே என் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார். தீட்டுன்னா என்ன நயினா?” என்று கேட்டான் பையன்.

“பிராமணப் பசங்கன்னா ஒசத்தியா நயினா? எங்களோட தோட்ட வேலைக் கெல்லாம் அவங்க வர்றதில்லை. சமையல் வேலையிலே மட்டும் தான் சேர்ந்துக்குவாங்க. அதிலேயும் பாத்திரம் கழுவுறது மட்டும் எங்க வேலை. ஒருநாள் நானும் சமையல் கத்துக்கட்டுமா என்று கேட்டேன். சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்களாம். அந்த சமையல் ஐயர் என்னை முறைத்துப் பார்த்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை நயினா.”

“அடிபட்ட அன்னிக்கே வீட்டுக்கு வந்துவிடத் துடித்தேன். ரயிலுக்குப் பணமில்லே. அதனாலே பொறுத்துக் கொண்டேன்.”

கேட்கக் கேட்க ரெட்டியாரின் உதடுகள் துடித்தன. கண்கள் சிவப்பேறின. நெஞ்சு குமுறியது. தான் ஏதோ பாவம் செய்துவிட்டது போன்ற உணர்வு அவரை வாட்டியது. காந்தியடிகளின் அஹிம்சை இயக்கத்திலே பெற்ற பயிற்சியைக் கொண்டு அவர் தம் மனத்தை அடக்கிக் கொண்டார்.

இரவு முழுவதும் தூக்கமில்லை.

மறுநாள் காலையில் மகனை அழைத்தார்.

“நீ ஈரோட்டுக்குப் போ. பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டுழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு” என்று அனுப்பி வைத்தார்.

புதிதாக ஒரு சிறுவன் தன்னைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு, பெரியார், அவனை “நீ யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

“நான் ஒமாந்துர் ரெட்டியாரின் கொடுக்கு” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் பையன்.

“என்ன செய்தி?” என்று கேட்டார் பெரியார்.

முதல்நாள் தன் தந்தையாரிடம் சொன்ன செய்திகளை யெல்லாம் பையன் ஆதியோடந்தமாக மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னான்.

தனித்தனிச் சாப்பாடு - தனித்தனி தண்ணிர்ப் பானை - சாதிவேற்றுமை - உயர்வு தாழ்வு - பெரியாருக்குச் சினம் பொங்கியது.

அந்தப் பார்ப்பனரை மிக உயர்ந்தவரென்று நம்பினோமே - நல்ல தேசபக்தர் என்று மதிப்புக் கொடுத்தோமே - தமிழர்கள் பணத்தை யள்ளி யள்ளிக் கொடுத்தோமே!

இதைச் சும்மாவிடக்கூடாது என்று கொதித்துப் பேசினார் பெரியார்.

ஒமாந்தூரார் செல்வாக்குப் பெற்ற தலைவர். அவர் இப்பிரச்சினையை உடனடியாக காங்கிரஸ் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மற்ற தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர் இது பற்றி அறிந்தும் பேசாமல் இருந்துவிட்டனர். ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்ட பேரது, அவர்களும் மனம் நொந்து குருகுலத்தில் நடந்த கொடுமைகளை எடுத்துக் கூறினர்.

அவசரச் செயற் குழுக் கூட்டம் ஒன்று கூடுமாறு அறிக்கை விட்டார், ஈரோட்டுப் பெரியார்.

காங்கிரஸ் செயற்குழுவில்

கருத்துப் போராட்டம்

1925ஆம் ஆண்டு சனவரி மாதம் 17ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இந்தச் செயற்குழுவில், குருகுலத்தில் சாதிப்பிரிவினை பற்றி ஆராய மூவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழுவினர்

கணபதி சாஸ்திரி

வி. தியாகராசச் செட்டியார்

கே.எம். தங்க பெருமாள் பிள்ளை

ஆகியோர் ஆவர்.

இவர்கள் குருகுலம் சென்று நேரில் விசாரனை செய்து அறிக்கை கொடுத்தனர்.

குருகுலத்தில் சாதிவேறுபாடு நிலவுவது உண்மை தான் என்றும், அதை நடத்தி வரும் வ.வே. சு. ஐயரே இரண்டு பிராமணப் பையன்களுக்கு தனியாக உணவருந்த ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும், இதை யொட்டிப் பார்ப்பனர்களுக்கு தனிப் பந்தி என்றும் மற்றவர்களுக்குத் தனிப்பந்தி என்றும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

ஒரு தேசிய நிறுவனமான குருகுலத்தில் சமபந்தி உணவு தான் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால், குருகுலம், காங்கிரஸ் கட்சியின் நிறுவனம் அல்ல வென்றும், அதற்கு, தான் கட்டுப்பட வேண்டிய தேவையில்லை என்றும் ஐயர் கூறி விட்டார்.

இதை யறிந்ததும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவும், செயலாளர் பெரியார் ஈவேராவும் கூடி ஏற்கனவே கொடுத்த ஐயாயிரம் ரூபாய் தவிர, மறுபடியும் காங்கிரஸ் நிதியிலிருந்து கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்த மீதி ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். இந்த முடிவை யறிந்த மறுநாளே ஐயர், மற்றொரு செயலாளரான கே. சந்தானம் அவர்களிடமிருந்து மீதி ஐயாயிரம் ரூபாய்க்கான செக்கை இரகசியமாக வாங்கிக் கொண்டுவிட்டார்.

ஏற்கனவே குருகுலத்துக்கு நன்கொடையளிப்பதாக வாக்களித்திருந்த பெருமக்களை ஐயர் அணுகிய போது, சாதி வேற்றுமையை உருவாக்கும் நிறுவனத்துக்குத் தாங்கள் உதவத் தயாராக இல்லை என்று கைவிரித்து விட்டனர்.

மலேயா, சிங்கப்பூர்வாழ் தமிழ் வணிகப் பெரு மக்களும், தாங்கள் வாக்களித்தபடி பணம் தருவதற்கில்லை என்று கூறிவிட்டனர்.

குருகுல நடைமுறைகளில் தலையிட காங்கிரசுக்கு உரிமை கிடையாது என்று ஐயர் தெரிவித்ததை யொட்டி, டாக்டர் வரதராசுலு நாயுடு, குருகுலத்திற்கு நன்கொடை யளித்த பெருமக்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

நன்கொடையாளர் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு தீர்மானம் நிறைவேறியது.

“பார்ப்பனர்களுக்குத் தனிச் சாப்பாடு, மற்றவர்களுக்குத் தனிச் சாப்பாடு என்ற வேறுபாட்டைக் குருகுல நிர்வாகிகள் உடனடியாக நிறுத்தி, சமபந்தி உணவு அளிக்க முன்வரவேண்டும். அப்படியில்லா விட்டால், சத்தியாக்கிரகம் செய்து குருகுலம் கைப் பற்றப்படும்” என்று தீர்மானம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தமிழ்த்தென்றல் திரு வி.க நடுநிலையான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

குருகுலத்துக்கு நன்கொடை யளித்த இரண்டு பார்ப்பனர்களின் சிறுவர்களுக்கு தனியுணவு வசதி செய்வதாக வாக்களித்து நன்கொடை வாங்கியதாக ஐயர் கூறுகிறார். வாக்களித்துவிட்டபடியால் - இந்த ஆண்டு படிப்பு முடியும் வரை தனி யுணவு பரிமாறும் முறையை வைத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு முதல் சமபந்தி உணவு தான் அமுலில் இருக்கும் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டு, அடுத்த ஆண்டிலிருந்து சாதி வேற்றுமை பாராமல் நிறுவனத்தை நடத்த ஐயர் முன் வரவேண்டும். தமிழ் மக்களும் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

வ.வே.சு. அய்யர் இந்த நடுநிலையான கருத்துக்கு ஒத்துப் போவதற்குப் பதிலாக, திரு.வி.க. சாதித் துவேஷ சக்திகளின் கைப்பாவை ஆகிவிட்டார் என்று கூறிவிட்டார்.

சாதிவேற்றுமை காட்டக்கூடாது என்று சொல்வது - பார்ப்பனர்களின் பார்வையில் சாதித் துவேஷம்!

ஒரே நிறுவனத்தில் உள்ள சிறுவர்களிடையே, பாகுபாட்டைப் புகுத்தக் கூடாது என்று சொல்வது சாதித் துவேஷம்!

இந்தச் சாதித் துவேஷம் என்ற சொல்லை வைத்துக் கொண்டு - பார்ப்பனர்களுக்குப் பிடிக்காத தலைவர்கள் தொண்டர்களுக்கெல்லாம் அவர்கள் துவேஷ முத்திரை குத்தினார்கள்.

மிக வசதியாக வாழ்ந்த தமிழர்கள் சிலரும் அவர்களுக்குப் பக்கவாத்தியமானார்கள்.

காங்கிரஸ் செயற்குழு திருச்சியில் 1925 ஏப்ரல் 27ம் நாள் மீண்டும் கூடியது.

கூட்டத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடு தலைமை யேற்றார். அவர் தமது தலைமை உரையில் குருகுலம் தொடர் பான அன்றைய நிலையை விளக்கிப் பேசினார்.

அது ஒரு தேசிய நிறுவனம் என்ற நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை யளித்தது. காங்கிரஸ் கொள்கைப்படி ஒரு பொது நிறுவனத்தில் சாதி வேற்றுமைகளையும், உயர்வு தாழ்வையும் வளர்க்கும் முறையில் எந்தச் செயலும் நிகழக் கூடாது. அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கரை கொண்டுதான் காங்கிரஸ் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் தீர்மானித்தது. அது தனிப்பட்டவருடைய நிறுவனம்; அதில் காங்கிரஸ் தலையிடக் கூடாது என்று கூறுவது பொருத்த மில்லை.

‘நன்கொடை கொடுத்த ஒவ்வொருவருக்கும் அதன் நடைமுறையில் அக்கறை யுண்டு. எனவே குருகுலத்தில் இனிமேல் சமபந்தி யுணவுதான் வழங்கப்பட வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோம்’ என்று கூறினார்.

வ.வே.சு ஐயர் அவ்வாறு வாக்குறுதி தந்திருந்தால் தீர்மானம் தேவையில்லையே என்று சிலர் கருத்துரைத்தார்கள். ஐயர் அப்படி வாக்குறுதி தர வில்லை என்றும், பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்துள்ள அறிக்கைகளின் மூலம் அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் பலர் எடுத்துக் கூறினார்கள்.

பெரியார் குறுக்கிட்டு இரண்டாவது முறையாகத் தர வேண்டிய ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்கக் கூடாதென்று செயற்குழு உறுப்பினர்கள் முடிவு செய்திருக்க, இணைச் செயலாளரான கே. சந்தானம் தமக்குத் தெரிவிக்காமல் செக் கொடுத்துவிட்டார் என்றும், அது கண்டனத்துக்குரியதென்றும் கூறினார்.

பார்ப்பன உறுப்பினர் ஒருவர் இடைமறித்து, “வ.வே.சு ஐயர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தக் தீர்மானிக்கப்பட்டது. பாரத கலாச்சாரம் என்பது என்ன? வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வருணப் பாகுபாடும் சாதிப்பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. வேதவிதி முறைப்படி தானே ஐயர் நடந்து கொண்டிருக்கிறார். இதிலே என்ன தவறு?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் ஈரோட்டுப் பெரியார் சினங் கொண்டார்.

“சாதிப் பாகுபாட்டுக்கும் உயர்வு தாழ்வுக்கும் வேதமும் சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்!” என்றார்.

"ஆரியர்களின் வேதகால காலாச்சாரம் தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிட கலாச்சாரத்தில், சாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்ற வேண்டும்” என்று டாக்டர் வரதராசுலு நாயுடு கூறினார்.

மற்றொரு பார்ப்பன உறுப்பினர் பேசுகையில்: “அரசாங்கப் பள்ளிகள் நடத்தும் பல உணவு விடுதிகளில் வேறு வேறு இடங்களில் தான் உணவு பரிமாறப் படுகிறது. இன்னும், சில தனியார் பள்ளிகளிலும் அவ்வாறு தான் நடக்கிறது. ஐயர் நடத்தும் குருகுலத்தில் மட்டும் இதை நீங்கள் வற்புறுத்துவதன் உள் நோக்கம் என்ன?” என்று கேட்டார்.

“சாதிவேற்றுமை கூடாது என்றும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றும் ஐயர் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செய்துவிட்ட தவறுக்கு உதாரணங்களை அடுக்குவதால் பயனில்லை. இனிமேல் சமபந்தி நடக்குமா நடக்காதா என்பது தான் பிரச்சினை” என்று நன்கொடையாளர்களில் ஒருவர் கேட்டார்.

“இங்குள்ள பல தலைவர்கள் சாதிவேற்றுமை கூடாதென்றும், இந்திய மக்கள் எல்லோரும் சமம் என்றும் பொதுக் கூட்டங்களிலே பேசியவர்கள், இன்றைக்கு, வேதம், சாஸ்திரம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது” என்றார் ஒருவர்.

“நன்கொடை கொடுக்கும் போது சமபந்தி நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்டதா அல்லது வாக்களிக்கப்பட்டதா? பள்ளிக்கூடத்துக்குப் பாடம் நடத்த நன்கொடை கொடுத்தீர்களா? சமபந்திக்கென்று கொடுத்தீர்களா?” என்று ஒரு ஐயர் கோபமாகக் கேட்டார்.

“இனிமேல் சமபந்தி நடத்துவதாக வாக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நன்கொடை களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று ஒரு தமிழர் ஆவேசமாகக் கூறினார்.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசப் பேச சூடு ஏறிக் கொண்டே யிருந்தது.

தலைவர் டாக்டர் நாயுடு எல்லாரையும் அமைதிப் படுத்தினார்.

“இப்பொழுது நான் தீர்மானத்தை வாக்களிப்புக்கு விடுகிறேன்.” உங்கள் வாக்களிப்பின் படி ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறித் தீர்மானத்தை வாசித்தார்.

“குருகுல வளர்ச்சிக்காக தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுக்க நேர்ந்ததற்கு இச் செயற்குழு வருந்துகிறது”

தீர்மானத்தை டாக்டர் நாயுடு படித்தார்.

செயற்குழு உறுப்பினர் ஒருவர் இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

“குருகுலத்தின் நடைமுறை சரியில்லாததால் கொடுத்த தொகையைத் திரும்ப வசூலிக்கத் தீர்மானிக்கிறது” என்று அவர் திருத்தம் கூறினார்.

இன்னொருவர் செயற்குழுவையே குறை கூறி ஒரு திருத்தம் கொண்டு வந்தார். ‘குருகுல நிர்வாகிகளிடம் தெளிவான வாக்குறுதி பெறாமல் நிதி கொடுக்கத் தீர்மானித்ததற்காக இக் கூட்டம் வருந்துகிறது’ என்பது அந்தத் தீர்மானம்.

மூன்றாவதாகச் சேலம் சி. இராசகோபாலாச் சாரியார் (இராசாசி) ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

‘சேரமாதேவி குருகுலம் போன்ற நிறுவனங்களின் நடைமுறையில் பொது மக்கள் தலையிடுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது. வேறுபாடு காட்டாமல் உணவு பரிமாற நடவடிக்கை எடுக்குமாறு குருகுல நிர்வாகிகளுக்கு இச் செயற்குழு ஆலோசனை கூறுகிறது.’

தவறு நடந்ததைக் கண்டிக்க முற்பட்ட செயற் குழுவையே கண்டிப்பதாகக் கூறும் இந்தத் திருத்தத்தை இராசாசி போன்ற ஒரு மூத்த தலைவர் கொண்டு வந்தது குறித்து செயற்குழுவின் பெரும்பாலோர் மறுத்தும், வருத்தம் தெரிவித்தும் பேசினார்கள்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவற்றை நிலைநாட்டுவதற்குப் பார்ப்பனத் தலைவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து கொள்ளுகிறார்கள் என்பதற்கு இந்தத் திருத்தம் நல்ல எடுத்துக் காட்டாகும்.

இந்த மூன்று திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திரு எஸ். இராமநாதன் அவர்கள் நான்காவதாக ஒரு திருத்தம் கொண்டு வந்தார்.

பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூக வாழ்க்கையில் பாராட்டக் கூடாது என்று இந்தக் குழு கருதுகிறது. இந்தக் கொள்கையை தேசிய இயக்கம் தொடர்பான எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. சேரமாதேவி குருகுலத்தில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவுமாறு இந்தக் குழு

1. தேவகோட்டை வி. தியாகராசச் செட்டியார்

2. எஸ். இராமநாதன்

3. ஈரோடு வே. இராமசாமி

ஆகியவர்களைக் கண்காணிப்புக் குழுவாக நியமனம் செய்கிறது.

திரு எஸ். இராமநாதன் இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகு, சி இராசகோபாலாச்சாரியார் மீண்டும் தலையிட்டுப் பேசினார்.

"சேரமாதேவியில் உள்ள குருகுலம் போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவது கடினம்.

“இப்போது அதுஉருவாகியுள்ளது. ஐயர் நல்ல கல்விமான். சிறந்த ஞானி. நாளாவட்டத்தில் அவரே சரிசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

“தனிப்பந்திமுறை என்பது எங்கும் நடைமுறையில் உள்ளது தான். பல கல்வி நிறுவனங்களிலும், கோயில்களிலும், பொது விழாக்களிலும் இப்போது தனிப்பந்தி முறைதான் உள்ளது. அப்படியிருக்க சேரமாதேவியில் மட்டும் சமபந்தி வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது.

ஐயர் குருகுலமே தன் வாழ்க்கை என்று அர்ப்பணித்துள்ளார். ஐயரை மனம் வருந்தச் செய்வது அழகல்ல’ என்று கூறினார்.

அவரை யடுத்து டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் பேசினார். “நான் ஐயரிடம் நெருங்கிய நட்புள்ளவன். அவருடைய தியாகம் பெரியது. உழைப்பு மிகப் பெரியது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமபந்தி நடைபெறுவதால் நாடு முன்னேறிவிடப் போவதில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போகிற பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா? என்று தான் பார்க்க வேண்டும். ஒன்றாகச் சாப்பிடா விட்டால் ஒன்றும் கேடு வரப் போவதில்லை. நான் அண்மையில் ஒரு சேரிக்கு நல்வாழ்வுப் பிரசாரத்துக்காகப் போனேன். பார்ப்பான் வந்ததால் சேரிக்குத் தோஷங் கழிப்பதற்காகப் பானைகளைப் போட்டு உடைத்தார்கள். பிராமணர்களோடு ஒன்றாக இருந்து உணவருந்த வேண்டும் என்று போராடுகிறவர்கள், பஞ்சமர்களோடு ஒன்றாக இருந்து சாப்பிடத் துணிவார்களா?” என்று பெரிதாகச் சாதித்துவிட்டது போலப் பேசினார்.

பஞ்சமர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் நீங்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்த்ப்பட்ட முறைதான் சமபந்தி விருந்து முறை என்பதை மறந்துவிட்டுப் பேசினார் ராஜன்.

தொடர்ந்து, “வ.வே.சு. ஐயர் சமபந்தி நடத்துவதாக யாருக்கும் வாக்குக் கொடுக்கவில்லை. யாரும் வாக்குறுதி வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவும் இல்லை. இந்த நிலையில் அவரை சமபந்தி தான் நடத்த வேண்டுமென்று வற்புறுத்துவது சரியில்லை” என்று தெளிவாகப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது போலப் பேசினார்.

ராஜனுக்குப் பிறகு திரு.வி. கலியாணசுந் தரனார் பேசினார்.

நானும் வ.வே.சு ஐயரும் நெருங்கிப் பழகியவர்கள்.

குருகுலம் எப்படி யெப்படி அமைய வேண்டும் என்று பல முறை என்னுடன் கலந்து ஆலோசித்துத்தான் ஐயர் குருகுலத்தை உருவாக்கினார். குருகுலத்தில் தமிழ் இலக்கியப் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லையே என்று நான் வருத்தம் தெரிவித்த போது, கூடிய விரைவில் சிறப்புத் தமிழ்ப் பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக ஐயர் உறுதி கூறியிருக்கிறார்.

மகாத்மா காந்தியவர்கள் குருகுலம் குறித்துப் பேசும் போது, “நடந்தது சரி, இனிமேல் சமபந்தியே நடத்துவதாக வாக்குக் கொடுங்கள். நான் நாயுடு விடமும் நாயக்கரிடமும் பேசி இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.” என்று கூறினார்.

அண்ணல் காந்தியடிகளின் சொல்லையும் ஐயர் ஏற்றுக் கொள்ளவில்லை.

காந்தியடிகள் பேச்சுக்கு ஐயர் மதிப்புக் கொடுத்திருந்தால், பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்றார் திரு.வி.க.

குருகுலத்திற்கு இடம் வாங்க முதன் முதலில் பணம் கொடுத்தவர் வயி.சு. சண்முகனார். அவர் செயற்குழு உறுப்பினரல்லர். இருந்தாலும் சிறப்பு அழைப்பின் பேரில் வந்திருந்தார்.

அவர் கூறினார்; ஐயர் பெரிய சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி. தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார் என்று எதிர்பார்த்தேன்.

இந்த சமபந்தி பிரச்சினை புயலாக எழுந்த பிறகு நான் சேரமாதேவிக்குச் சென்றேன். நட்புரி மையோடு ஐயரிடம் பேசினேன். சமரசமாகப் போக வேண்டும் என்று எடுத்துச் சொன்னேன்.

ஆனால் ஐயர் பிடித்த பிடியை விடவில்லை. குருகுலத்தின் எதிர்காலத்தை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வை அவர் மதிக்கவில்லை. எதற்கும் ஒத்து வரவில்லை.

இந்த நிலையில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றி அவரைக் கண்டிப்பதைவிட வேறு வழியில்லை என்று மிக வருத்தத்துடன் பேசினார்.

ஈரோட்டு இராமசாமிப் பெரியார் பேசும்போது,

இது வெறும் சமபந்தி பற்றியது மட்டுமல்ல. ஒரு ஜாதிக்காரர்கள் இன்னொரு ஜாதியைக் கேவலப் படுத்துகின்ற செயல்.

இது பிராமணர்களும் மற்ற ஜாதிக்காரர்களும் பொருத்த விஷயம் மட்டுமல்ல. பஞ்சமர்களும் நமக்குச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இன்று நாட்டில் அப்படியிருக்கிறது; இப்படி யிருக்கிறது அதன்படி நாமும் இருந்து விடலாம் என்பதல்ல; நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம்.

இந்த நிலையில் நாம் எல்லோரும் டாக்டர் நாயுடுவை ஆதரிக்க வேண்டும். அவருடைய தலைமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். எனவே திரு எஸ். இராமநாதனுடைய திருத்தத்துடன் நாம் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம். என்றார். வந்திருந்த 26 பேரில் 19 பேர் ஆதரித்தார்கள். 7 பேர் எதிர்த்தார்கள்.

கூட்டத்திற்குக் கூட்டம் சாதி வேற்றுமையை ஒழிப்போம் என்று பேசிய பெரும் புள்ளிகள், நான்குபேர், கூட்டம் முடிந்தவுடனே செயற்குழுவிலிந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்கள். நான்குபேரும் பார்ப்பனத் தலைவர்கள்.

1. சி. இராஜகோபாலாச்சாரியார்

2. டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன்

3. கே. சந்தானம்

4. டாக்டர் டி.வி. சுவாமிநாதன்.

இந்த நான்குபேரும் காந்தியடிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், தாங்களே காந்தியின் வாரிசுகள் என்று காட்டிக் கொள்பவர்கள்.

இவர்கள் குருகுலப் பிரச்சினையில் வ.வே.சு. ஐயர் செய்த செயல் தவறு என்று சொல்வதற்குப் பதில் - தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அவரைத் திருத்துவதற்குப் பதில், அவரைத் தாங்கிப் பிடித்தார்கள். அவருடைய தவறே நேரானது என்று வாதிடத் தயங்கவில்லை.

வேதம்

சாஸ்திரம்

வருணாசிரம தர்மம்

இவற்றை நியாயப்படுத்தி வேத கலாச்சாரம் தான் தங்கள் பாரத கலாச்சாரம் என்றும். அதை நிலை நாட்டுவதே தங்கள் கடமை யென்றும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

வ.வே.சு. ஐயரையே நினைத்துப் பார்ப்போமானால் அவர் பெரிய பண்டிதர். பல மொழிகள் அறிந்தவர். நல்ல இலக்கியப் பயிற்சி உள்ளவர். வேதம் உபநிடதம் போன்ற நூல்கள் மட்டுமல்லாமல், வடமொழி இலக்கியங்களும், கம்பராமாயணமும், சங்க நூல்களும், திருக்குறளும் பயின்றவர். கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

ஆங்கில இலக்கியங்களும் இலத்தின் மொழி இலக்கியமும் கற்றவர்.

மகரிஷி என்று பாராட்டப்பட்டவர். மேலை நாடுகளுக்குப் போய் வந்தவர். பல பெரிய மனிதர்களோடு பழகியவர். அவரே ஒரு பெரிய மனிதராக மதிக்கப்பட்டவர்.

பழந்தமிழர்களின் நாகரிகச் சிறப்பை நன்கு தெரிந்தவர்.

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யுடையவர் சாதிப்பாகுபாடுகளை நிலை நாட்டும் செயலைச் செய்தார் என்றால் அதன் பொருள் என்ன?

கற்றும் அறிந்தும் பிறர்க்குரைத்தும்

தான் அடங்காப்

பேதையிற்

பேதையார் இல்

என்ற பொன்மொழிக்கிணங்க அவர் எந்த நிலையிலும் யார் பேச்சும் கேட்காமல் செயல்பட்டார். இது ஒரு பேதைமை என்று நாம் அலட்சியமாக எண்ணிவிடுவதற்கில்லை.

இவரைச் சார்ந்தவர்கள்; இவர் போக்கை ஆதரித்தவர்கள்; அதற்காக வாதாடியவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களும் மிகப் பெரிய மேதைகளே! பேதைகள் அல்லர்!

மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய மேதையை அளவிட்டுச் சொல்வதற்கில்லை.

கே. சந்தானம், மிகப் பெரிய அரசியல் தத்துவ வல்லுநர்.

டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் மூதறிஞர் ராஜாஜியின் நிழல் போன்றவர் டாக்டர் சுவாமிநாதன் பெரிய இலக்கிய மேதை!

இவர்களெல்லாம் வ.வே.சு ஐயர் செய்த ஒரு மோசமான செயலை ஆதரிக்கிறார்கள் என்றால் அதன் பின்னணி என்ன?

நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேதம்

உபநிடதங்கள்

பாரதம்

இராமாயணம்

18 புராணங்கள்

மனுநீதி

கீதை

இப்படிப்பட்ட நூல்களை இவர்கள் போற்றுவார்கள்.

உலகத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள், மாறுதல்கள் ஏற்பட்டாலும் இந்த அடிப்படை யிலிருந்து சிறிதும் நழுவிப் போகக்கூடாதென்ற எண்ணமுடையவர்கள்.

இதன் கருத்து என்ன?

வேதம் முதலான நூல்களெல்லாம் பார்ப்பனர்கள்தான் வாழப் பிறந்தவர்கள்.

இந்தப் பார்ப்பனர்கள் தான் உயர்ந்த நிலைக்கு ஏறப் பிறந்தவர்கள்

இவர்களுடைய ஆதிக்கத்தின் கீழேதான் இந்த உலகம் இயங்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாந்த நேயத்துக்கு மாறுபட்ட கருத்துக்களை உடையன, இந்தப் பழங்கால இலக்கிய நச்சுக்குப்பிகள்! இவை நிலைத்திருக்க வேண்டும் என்றும், இவற்றின் உதவியால் தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் எல்லாவிதமான வசதிகளோடும் வாழ வேண்டும் என்றும் எண்ணமுள்ளவர்கள். இதற்கு வ.வே.சு ஐயர் விதிவிலக்கல்லர்.

மூதறிஞர் ராஜாஜியும் விலக்கல்லர். கே. சந்தானம், ராஜன், சுவாமிநாதன் போன்றவர்களும் இத்தகையவர்களே!

இவர்களுடைய பிடிக்குள் அகப்பட்டவர்கள் தன்னிச்சையாகச் சிந்திக்க முடியாது.

இதைத் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

காந்தியடிகள்

தடம்புரண்டார்

காந்தியடிகள் உலகம் போற்றும் உத்தமர். தம் வாழ்க்கையையே சத்திய சோதனையாக நடத்தியவர்.

உண்மைக்கு ஓர் இலக்கணமாக இருப்பவர். இந்திய நாட்டின் தந்தை என்று எல்லோராலும் போற்றப்படுபவர்.

சில நேரங்களில் தாம் சரியென்று நினைத்த ஒரு செயலை விடாப்பிடியாக நிறைவேற்றிக் காட்டுப வர்.

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யெல்லாம் உடைய காந்தியடிகள் ஒரு சில நேரங்களில் சபல மனம் உடையவராக மாறிவிடுவார்.

இவருடைய சபலங்களுக்கெல்லாம் காரணம் இவருடன் மிக நெருங்கிப் பழகிய பார்ப்பனர்கள் தான்!

தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நல்ணெத்தில் காந்தியடிகள் அரிசன இயக்கத்தைத் தொடங்கினார். முழுமூச்சாக உழைத்து அரிசனங்கள் முன்னேற வழிகாட்டியாய் விளங்கினார்.

பிற்காலத்தில் அரிசன நலன்களுக்கு எதிராக காந்தி செயல்படுகிறார் என்று அரிசனங்களாலேயே நிந்திக்கப்படுகிறார்.

நன்றி பாராட்ட வேண்டியவர்கள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதேன்? நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் அடிமைப் படுத்தப்பட்டு - பரம்பரை பரம்பரையாக விலங்குகளினும் கீழாக நடத்தப்பட்டு வந்த பஞ்சமர்கள் முதலானோர் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து அவர் தீண்டாமை யொழிப்பு முதலிய இயக்கங்களைத் தொடங்கினார் என்பது மறுக்க முடியாது.

ஆனால், மேலும் அவர்கள் முன்னேறுவதற்காக டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் புரட்சிகரமாகத் தொடங்கிய போராட்டங்களுக்கு அவர் பெரும் முட்டுக்கட்டையாக நின்றார் என்பதும் மறுக்க முடியாத உணமை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? காந்தியிடம் காணப்பட்ட உறுதியில்லாத் தன்மையேயாகும்.

மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு போராட்டங்களைத் தொடங்குவார். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதை நிறுத்திவிட்டதாக அறிக்கை விடுவார். தொண்டர்களுக்கு மனம் கசந்து போகும்.

காரணம் கேட்டால் எங்கோ ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்பார்.

போராட்டம் என்றால் இலட்சக் கணக்கானவர்கள் ஈடுபடும் செயல். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதை அவர் சிந்தித்துப் பார்க்க மாட்டார். மேலும் சில சமயம் அரசியல் எதிரிகளே களத்தில் புகுந்து கலகம் விளைவிப்பார்கள். இதெல்லாம் தவிர்க்க முடியாது என்று எண்ணிப் பார்க்கமாட்டார்.

நாம் இன்னும் போராட்டத்திற்குத் தகுதி பெற வில்லை என்று கூறி நிறுத்தி விடுவார். உண்மையான தொண்டர்களின் உற்சாகம் களைத்துப் போகும்.

இதெல்லாம்கூட ஒருவகையில் நியாயந்தான் என்று ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளலாம். சில சமயம் அநியாயங்களுக்கே துணைபோவார்.

குருகுலப் போராட்டத்தில் அவர் தடம் புரண்டது இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

குருகுலம் தொடர்பான காரசாரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த காந்தியடிகள் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவையும் சந்தித்துப் பேசினார்; குருகுலம் நடத்திய வ.வே.சு ஐயரையும் அழைத்துப் பேசினார்.

பிரச்சினையை அதன் தன்மையைப் புரிந்து கொண்டு - அதன் நியாயத்தைத் தெளிந்து தீர்ப்புக் கூறுவதானால் அதில் அவர் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருக்க முடியும், உறுதியான முடிவுக்கு வந்த நிலையில் அவர் தன் தீர்ப்பை ஒரு கட்டளையாக இட்டிருந்தால் கூட இருதரப்பாரும் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகி யிருக்கும்.

ஆனால் காந்தியடிகள் பிரச்சினையை அதன் தன்மையை யொட்டி முடிவெடுக்கவில்லை. அதில் தொடர்புடையவர்கள் யார் என்ற நிலையை யொட்டி அணுகினார். அதனால் அவர் ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு தீர்ப்பளித்து அதற்கு முடிவு காட்டத் தவறிவிட்டார்.

இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நெறி முறையின் சார்பாக நின்று கட்டளை இடுவதற்குப் பதிலாக - தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக - காந்தி யடிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அவருடைய சமாதானத்தை இரு தரப்பாருமே ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரோ, நியாயத்தை நிலை நிறுத்தாமல் விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். டாக்டர் வரதராசுலு நாயுடு ஈரோட்டாரைப் போல எதையும் வெட்டொன்று துண்டிரண்டு என்ற போக்கில் பேசுபவர் அல்லர். ஆனால், இந்தப் பிரச்சினை காங்கிரசின் உயிர் நாடியான பிரச்சினை. சாதி வேற்றுமையை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற கொள்கைப் பிரச்சினை, எனவே அவர் இதில் கடைசிவரை உறுதியாக நின்றார்.

பெரும்பாலான பிரச்சினைகளில் அவர் ஈரோட்டாருடன் ஒத்துப் போவதே இல்லை. ஆனால் இயக்கத்தின் உயிர்நாடியான பிரச்சினை மட்டுமல்லாமல், கோடான கோடி மக்களின் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கின்ற பிரச்சினையாகவும் இது இருந்ததால் இதில் அவர் எள்ளளவும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

பார்ப்பனர்களோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. மனிதருக்குள் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் மோசமான கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டிய பொறுப்பில் அவர் இருந்ததால், இதில் யாருடைய சமாதானத்திற்கும் அவர் இணங்குவதாக இல்லை.

வ.வே.சு ஐயரோ, அவருக்குப் பின்னணியில் நின்ற ராஜாஜி, சந்தானம், ராஜன் சுவாமிநாதன், ஆலாஸ்யம் போன்ற பார்ப்பனத் தலைவர்களோ, தொன்று தொட்டுத் தங்கள் இனத்தார் அனுபவித்து வரும் சாஸ்திரபூர்வமான மேலாதிக்கத்தை இழந்து விடத் தயாராக இல்லை.

மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கும், தங்கள் தலைமைப் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும் அவர்கள் சமத்துவம் பேசுவார்கள்; சமரசம் பேசுவார்கள்; சாதிவேற்றுமை ஒழிய வேண்டும் என்பார்கள். அது செயற்படத் தொடங்கிவிட்டால், இது அடுக்குமா? சாத்திரத்தை மீறலாமா? சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வலையில் காந்தியடிகள் சிக்கிக் கொண்டார். இந்தியா முழுவதும் யாரைத் தங்கள் விடிவு காலத்தை உருவாக்கத் தோன்றிய கதிரவன் என்று எதிர்பார்த்தார்களோ, அந்தத் கதிரவன் பார்ப்பனிய மூடுபனியால் மறைக்கப்பட்ட கதிரவனாகிவிட்டார்.

அவர் பார்ப்பனர்களுக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடத் தொடங்கினார்.

சாதி யொழிப்பு என்பது காந்தியக் கொள்கைகளிலே ஒன்றாக இருந்தது. சமபந்தி விருந்து என்பது அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவும் ஒரு வழியாக அமைந்தது.

சமபந்தி உணவுபற்றி காந்தி தமது கருத்து விளக்கம் என்ற முறையில் 1925 ஏப்ரல் 15 ஆம் நாள், தாம் நடத்திய “யங் இந்தியா” வாரப் பத்திரிகையில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குழப்பிக் குழப்பி அவர் எழுதிய விளக்கம் இது தான்:

“ஒரு உணவு விடுதியில் வசிப்பவர்களில் பல ஜாதிச் சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரே அறையில் சமபந்தியாகச் சாப்பிடச் செய்ய வேண்டுமா” என்று என்று ஒரு அன்பர் கேட்கிறார். கேள்வி சரியாகக் கேட்கப்படவில்லை. ஆனால், கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்குப் பதில், அந்தக் குழந்தைகளைச் சமபந்தியில் உணவருந்தச் செய்யலாகாது என்பதேயாகும்.

“ஆனால், கேள்வி கேட்பவர், அந்த உணவு விடுதியில் சேருபவர்கள் சமபந்தியில் சாப்பிட்டாக வேண்டும் என்று விதி செய்ய விடுதிக்காரருக்கு உரிமை இல்லை என்று வாதிப்பாரானால், அது சமபந்தி பற்றிய நிபந்தனையின்றிச் சேர்க்கப்பட்ட சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பிற ஜாதியாருடன் உணவருந்தச் செய்வதாகும். ஆகையால் விதி ஏதும் முன்கூட்டியே அறிவிக்கப்படாத சந்தர்ப்பத்தில், வழக்கமான தனிப்பந்தி முறைகளே சரியாகும்.

“இந்தச் சமபந்திப் பிரச்சினை தொல்லை பிடித்தது. இதுபற்றிக் கண்டிப்பான விதிகள் ஏதும் செய்ய முடியாது என்பது என் கருத்து. இது அவசியமான சீர்திருத்தம் தானா என்றுகூட என்னால் சொல்ல முடியாது. அதே சமயம், இந்த பேதத்தை முற்றிலும் தகர்த்தெறிய விருப்பம் பெருகுவதை நான் உணருகிறேன். சமபந்திப் பாகுபாட்டுக்கு ஆதரவாகவும் சரி, எதிராகவும் சரி நான் காரணங்கள் கூற முடியும். இதில் வேகம் கூட்டுவதற்காக நான் வலுக்கட்டாயத்தை உபயோகிக்க மாட்டேன். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பது பாவம் எனக் கருதமாட்டேன்; சமபந்தி போஜனம் செய்வது பாவம் என்பதையும் ஏற்க மாட்டேன். ஆனால், பிறரது உணர்ச்சிகளை மதிக்காமல் தனிப் பந்தி முறையை மாற்ற முயலும் எல்லா முயற்சிகளையும் நான் உறுதியாக எதிர்ப்பேன். மாறாகப், பிறரது உணர்ச்சிகளைப் புறக்கணிக்காமல், அவர்களது உணர்ச்சிகளை மதித்து நடப்பேன்.”

நான் நாயுடுவையும் நாயக்கரையும் சமாதானப் படுத்துகிறேன். நீங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் சமபந்தி நடத்த ஒப்புக் கொள்கிறீர்களா என்று ஐயரைக் கேட்ட காந்தியடிகள் தான் இதை எழுதினாரா? நம்ப முடியவில்லை.

சந்தானமோ ராஜகோபாலாச்சாரியோ எழுதிக் கொடுத்ததை அப்படியே கையெழுத்திட்டு பத்திரிகையில் வெளியிட்டாரா என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.

பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்ற காந்தியடிகள் ஆயிரக் கணக்காண ஆண்டுகளாக சாதிக் கொடுமையால் வெந்து நொந்து புழுங்கிச் செத்துக் கொண்டு வருகின்றவர்களுக்கு உணர்ச்சிகளே இல்லை என்று நினைத்து விட்டார் போலும்.

எப்படியாயினும் இந்த அறிக்கையின் மூலம்

“நான் பச்சையாகப் பார்ப்பனர்கள் பக்கம்தான் இருக்கிறேன்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் காந்தியடிகள்.

இப்படிப்பட்ட கருத்தை அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த பிறகு அவரைப் பற்றி என்ன நினைப்பது?

“மகாத்மா காந்திக்கி ஜே!” என்ற முழக்கம் தமிழ் நாட்டில் தான் ஓங்கி ஒலித்தது.

ஆனால் காந்தியடிகள் தடம் புரண்ட பிறகு இந்த முழக்கத்தின் ஒலி மெல்ல மெல்ல மங்கி முற்றிலுமாக மறைந்தே போயிற்று!

காந்தி தடம்புரண்ட வரலாறுகள் ஒன்றா இரண்டா ?

ஏழைகள் முன்னேற வேண்டும் என்பார். பிர்லா மாளிகையில் தங்கிப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்.

அரிஜனங்கள் சீர்பெற வேண்டும் என்று கூறுவார்; ஆனால். அவர்களுக்குத் தனித் தொகுதி கூடாதென்பார்.

எல்லோரும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்பார்; பொது உடைமைத் தத்துவம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்பார்.

சாந்தமான அஹிம்சை வழியே சாதனைக்கு உகந்த வழி என்பார்; போர்வெறியூட்டும் கீதையை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பார்.

சாதி வெறி கூடாதென்பார்; வருணாசிரம தருமத்தை மீறக்கூடா தென்றும் சொல்வார்.

இப்படி ஏறுக்கு மாறான கருத்துக்கள் பலவற்றைப் போட்டுக் குழப்பிக் கொண்டு எந்த வழி ஏற்ற வழி என்று தெரியாமல் திண்டாடும்படி வழிநடத்துவார்.

காந்தியடிகள் மிகச் சாதாரணமான ஒரு சராசரி மனிதனின் இயல்பையே பெற்றிருந்தார் என்பதற்கு இவை யெல்லாம் எடுத்துக்காட்டுகள்.

பொதுவாக இளமைப் பருவத்தில் தான் இலட்சியவாதிகள் உருவாகிறார்கள். முதுமையிலும் அதைக் கட்டிக் காப்பவர்கள் கால காலத்துக்கும் உலகுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைந்து விடுகிறார்கள்.

பருவம் முதிர முதிர இலட்சியங்களில் ஈடுபாடு குறைந்து சூழ்நிலையை அனுசரித்து நடக்கத் தொடங்குகிறவர்கள் மதிக்கப்படுவதில்லை. அதனால் மறக்கப்படுகிறார்கள். இதற்கு காந்தியடிகள் நல்ல சான்றாகிறார்.

காங்கிரசில் செல்வாக்குடைய பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தங்கள் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம்.

குருகுலம் பற்றி ஒரு குழப்பமான கருத்தை வெளியிட்டு அவர்களை ஆதரித்த காந்தியடிகள், பிற்காலத்திலும், தாம் வளர்த்த சம நீதிக் கொள்கைக்கு மாறுபட்டுப் பேசத் தொடங்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் காங்கிரசிலிருந்து விலகிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து நாடெங்கும் சுற்றிச் சுற்றி மிகத் தீவிர மாகக் கொள்கை பரப்புதலில் ஈடுபட்டார்.

குடியரசு இதழ் மூலமும் சாதி ஒழிப்பு விளக்கங்களை மக்களிடையே பேரளவில் பரப்பினார்.

இதைத் தாங்க முடியாத பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து வருணாசிரம தருமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச வைத்தனர்.

பல கூட்டங்களில் காந்தியடிகள் வருணாசிரம தருமத்தை விளக்கிப் பேசினார்.

1927ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சுதேசமித்திரன்” நாளிதழ் ஒன்றில் இப்படி காந்தியடிகள் பேசிய பேச்சு - வருணாசிரம முறையை ஆதரித்துப் பேசிய பேச்சு வெளியிடப் பட்டிருக்கிறது.

அது இதுதான்;

“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.

பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜன சேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.

எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷடித்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான்.

இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் - கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.

இப்படி யிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மமானது சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.”

காந்தியடிகள் மைசூரில் பேசிய இந்தப் பேச்சு சிறிதாவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறதா? இதைக் காந்தியடிகள்தான் பேசினாரா?

தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட காந்தியடிகள், அப்படிப்பட்ட ஒரு வெறிக் கொள்கையால் இந்தியாவில் ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்துதான் அரிசன இயக்கம் தொடங்கினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். அப்படிப்பட்ட காந்தியடிகள், இந்த வருணாசிரம தருமத்தால் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று எப்படி நினைக்க முடியும். அது முடிந்த செயலா?

ஒரு பஞ்சமன் தனக்கு விதிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலைச் சிறப்பாகச் செய்தால், அவனை உயர்ந்தவன் என்று பாராட்டி, இந்தப் பார்ப்பனர்கள் கொண்டாடுவார்களா?

ஒரு தாய் தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமையை அவன் சமுதாயத்துக்குச் செய்கிறான் என்று பாராட்டுவார்களா? பாராட்டியிருக்கிறார்களா? அவன் தாங்கள் இருக்கும் அக்கிரகார வீதியிலேயே நுழையக் கூடாது என்றல்லவா ஒதுக்கி வைத்தார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிரவிடனைத் தோள் மேல் கையோட்டு அக்கிரகாரத்துக்குள் அழைத்து வந்த பாரதியைச் சாதியிலிருந்து விலக்கி வைத்த அக்கிரகார வாசிகள் எப்படி உயர்வு கொடுப்பார்கள் என்று காந்தியடிகளால் கருத முடிந்தது.

கீழான ஒருவருணத்தைச் சேர்ந்தவன், மேலான வருணத்தைச் சேர்ந்தவனுக்கு என்று வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்ததற்காக, அடிக்கப்பட்டான் என்றால், இந்த வருணாசிரமத்தை வைத்துக் கொண்டு எப்படி சமுதாய நலத்தைக் காப்பதென்று காந்தியடிகள் சிறிதாவது சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பாரா?

தென்னாப்பிரிக்காவிலிருந்து முழுக்க முழுக்கச் சமுதாய நல உணர்வோடு இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள், மக்களெல்லாராலும் தங்கள் வழி காட்டி என்று போற்றிப் புகழ்ந்து பாராட்டப்பட்ட காந்தியடிகள் எப்படி இந்த வலையில் சிக்கிக் கொண்டார்.

காந்தியடிகளிடம் தொண்டராயிருந்து பயிற்சி பெற்ற ஈரோட்டு இராமசாமி நாயக்கர், தெளிவான சிந்தனையாளராக விளங்கினார். அதனால் தான் அவர் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் வருணாசிரம முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று புரட்சி செய்தார்,

காந்தியடிகளின் இது போன்ற சொற்பொழிவுகளைக் கேட்டபிறகு, பெரியார், தோழர் எஸ். இராமநாதனை உடனழைத்துக் கொண்டு காந்தியடிகளைப் போய்ச் சந்தித்தார். காந்தியடிகளுடன் பேசியது பற்றி 28-8-1927 குடியரசு இதழில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறார்.

முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியே தான் மகாத்மாவிடம், நாமும், நமது நண்பரான திரு எஸ். இராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம், இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்க வேண்டுமென்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை யென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது. மூன்றாவது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.

இம் மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாய் இல்லையென்று சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.

காந்தியடிகள் சமுதாய முன்னேற்றத்துக்கு மாறுபாடான கருத்துக்களைச் சொல்லத் தொடங்கிய பிறகு, இந்திய மக்கள் மதிப்பிலே குறையத் தொடங்கிவிட்டார்.

சமுதாயத் தலைவராகிய அவர் எப்படி இந்தச் சதி வலையில் சிக்கினார் என்பது பெரிதும் வியப்புக்குரியதாகும்.

சமூக நீதியே

சமநீதி

குருகுலப் போராட்டத்திலிருந்து பெரியார் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்.

ஆசார சீலர்களாயுள்ள பார்ப்பனர்களிலிருந்து ஆசாரங் கெட்ட பார்ப்பனர்கள் வரை எல்லோருமே தருமம் நியாயம் என்பதை எப்போதும் அனுசரிப்ப தில்லை.

தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள் சாதி யுயர்வைப் பாதிக்காத வரையில் தான் செல்லுபடி யாகும். தருமம் நியாயங்கள் எல்லாம் சாதி அடிப் படையில் கை வைக்கத் தொடங்குமானால் அவர்கள் அவற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிடத் தயங்க மாட்டார்கள்.

காந்தி பக்தர்கள் என்றும், காந்தியவாதிகள் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட வர்கள், காந்தி கொள்கைகளான சத்தியம் அஹிம்சை சமாதானம் சமத்துவம் என்பவற்றை யெல்லாம் உதட்டளவிலே உச்சரித்து - மேடைகளிலே முழக்கிஅதற்காகவே உயிர் வாழ்வதாகக் கூறுவார்கள்.

அதை யாராவது ஒருவர் செயல் அளவில் நிறைவேற்றத் தொடங்கினால், அதனால் தங்கள் சாதி மேலாதிக்கம் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டால், அவர்களை வீழ்த்துவதற்குப் பின்வாங்க மாட்டார்கள்.

அந்த உன்னதமான கொள்கைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று அந்தக் காந்தியே முனைந்தார் என்றால் அவரையும் விட்டுவைக்க மாட்டார்கள்.

காந்தியடிகளின் பிற்காலக் கொள்கைகள் எல்லாம் அவர்களுடைய கொள்கைகளாகவே - அவர்களுக்கு அனுசரணையான கொள்கைகளாகவே வெளிப்பட்டன.

இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

சாதிவேற்றுமை கூடாது என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

திறமைசாலிகளுக்கே முதலிடம் என்று சொல்லி எல்லா இடத்திலும் அவர்களே இருந்து கொள்வார்கள். மற்ற சாதிக்காரர்கள் திறமையடையாதபடி விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்வார்கள்.

இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாக உணர்ந்து கொண்டார்.

சாதிவேறுபாடின்மை - திறமை என்ற சங்கிலியை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் மட்டுமே மேலிடத்தில் ஏறியமர்ந்து கொள்ளும் வித்தையை அறிந்து கொண்ட பெரியார்,

சாதிப் பெயரை வைத்துக் கொண்டே ஒவ்வொரு சாதியும் முன்னேறக்கூடிய ஒரு வழியைக் கண்டு பிடித்தார்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்; அதற்கு அரசு வேலை வாய்ப்புக்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்துக் காங்கிரசில் இருந்து கொண்டே போராடத் தொடங்கினார்.

இதுவே இன்று சமூகநீதி என்று எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி விகிதாசாரப்படி முன்னுக்கு வந்து விட்டால், எல்லாருக்கும் எல்லா நிலையிலும் உயர்வு கிடைக்க வழியேற்படும்.

வேத சாஸ்திரங்களின் குரல்வளையை முறிக்க அவை வளர்த்த சாதிகளின் பெயராலேயே ஒரு வழியைக் கண்டு பிடித்தார் பெரியார்.

இதைக் கண்ட பார்ப்பனர்சுள், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள் ஒழிவதற்குப் பதிலாக வளர்ச்சியடையுமே என்று கண்ணிர் வடிக்கத் தொடங்கினார்கள். ஆடு நனையுதே என்று ஒநாய் கண்ணிர்விட்டதுபோல் உள்ளது இன்றைய நிலை.

ஆம்! சாதிகள் வளர்ச்சியடையும் தான். உண்மையில் ஒவ்வொரு சாதி மக்களும் வளர்ச்சியடைவார்கள்.

சமூகநீதி செயல்பட்டால் ஒவ்வொரு சாதிக் காரரும் உயர்ந்த பதவிக்குவர முடியும். அது மட்டுமல்ல அவரவர் எண்ணங்களுக்குத் தகுந்தபடி மேல் நிலைக்குவர முடியும்.

நீதிபதிப் பதவியோ, அமைச்சர் பதவியோ, கவர்னர் பதவியோ, கலெக்டர் பதவியோ எந்தப் பதவியாக இருந்தாலும் பூசாரிப் பதவியாக இருந்தாலும் கூட 100 இடம் இருந்தால், சாதி விகிதாசாரப்படி, அந்தப் பதவிகளில்,

தாழ்த்தப்பட்டோர் 19 பேர்

மிகப் பிற்படுத்தப்பட்டோர் 25 பேர்

பிற்பட்டோர் 37 பேர்

முற்பட்டோர் 5 பேர்

இசுலாமியர் 5 பேர்

கிறித்தவர் பிறமதம் 5 பேர்

பழங்குடியினர் 1 வர்

பார்ப்பனர் 3 பேர் என்று எல்லா வகுப்பாரும் இடம் பெறும்போது, எல்லா இனத்தவரும் முன்னேறும் நிலை ஏற்படும்.

கல்வி கற்பதிலும், இதே விழுக்காட்டில் ஒவ்வொரு சாதியாருக்கும் இடம் கிடைக்கும்.

பார்ப்பனர் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 பேர் மட்டுமே இடம் பெறுவர்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பார்ப்பனர்கள் திறமைசாலிகள் ஒதுக்கப்படலாமா? என்று கூக்குரல் இடத் தொடங்கிவிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திறமை யடையாதபடி ஒதுக்கப்பட்ட இனத்தவர்கள் திறமை பெறவும், திறமை பெற்றவர்கள், பதவி பெறவும், பதவி பெற்றவர்கள் தங்கள் இனத்தாரை முன்னேற் றவுமான வாய்ப்புகள் சமூகநீதி முறையினால் எல்லாருக்கும் கிடைக்கின்றன. ஒழிக்க முடியாத சாதியை அடிப்படையாக வைத்தே ஒல்வொரு சாதியும் முன்னேறி மேல் நிலைக்கு வருவதற்கு உரிய அருமையான வழிதான் வகுப்பு விழுக்காட்டுநீதி. சமூகநீதி!

பெரியார், நம்முடைய முன்னோர்களைப் போலவே சாதிக் கொடுமையை அனுபவித்தவர். பார்ப்பனர்களால் நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொருவரைப் போலவும் அவமானப்படுத்தப்பட்டவர். நம் முன்னோர்கள், இதை விதி யென்று பொறுத்துக் கொண்டார்கள். பெரியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . போராடினார். தனக்காக மட்டு மல்லாமல் நமக்காக - நம் ஒவ்வொரு சாதியாருக் காகவும் போராடினார்,

நாயக்கர்களுக்காக என்றல்ல, நாயுடுமாருக்கும், முதலியாருக்கும், நாடாருக்கும், தேவருக்கும், வேளாளருக்கும், குலாலருக்கும், பள்ளருக்கும், பறையருக்கும், கள்ளருக்கும், கவுண்டருக்கும், வண்ணாருக்கும், முடிமழிப்போருக்கும், சக்கிலியருக்கும், முத்தரையருக்கும், இன்னும் எத்தனையோ பேருக்கும் எண்ணிறந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அத்தனை பேருக்குமாக அவர் போராடினார்.

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பார்களே அதுபோல சமூகநீதிப் பிரச்சினை எத்தனை தோல்விகளைத் தழுவியுள்ளது என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும்!

தோற்றுத் தோற்று விழுந்த நம் தன்மான இயக்கத் தொண்டர்கள், திராவிடர் இயக்கத்தவர் தோல்வி கண்டு துவளாது - எதிர்ப்புக் கண்டு மலையாது - வீழ்ச்சிகண்டு சலியாது செய்த முயற்சியின் பயன் தான் இன்றைய வெற்றி! இது முழு வெற்றி யல்ல, என்று இந்தியா முழுவதும் வகுப்பு விழுக் காட்டு வாய்ப்பு ஏற்படுகிறதோ அன்று தான் நாம் முழு வெற்றி அடைந்ததாகப் பொருள்!

இன்றும் பல துறைகளிலே பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்கள் மேல் நிலையில் இருப்பதால், நம் முயற்சிகளை எல்லாம் எளிதில் தட்டிவிட முடிகிறது. இதற்கு முத்தாய்ப்பு வைக்க நாம் சோர்வடையாது உழைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் மகனும் இதில் விழிப்பாக இருக்க வேண்டும்.

முன்னுக்கு வந்த ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னலமற்றவனாகத் தன் இனத்தாருக்கு உதவுபவனாக இருக்க வேண்டும். எந் நிலையிலும், தாழ்த்தப் பட்டு, பிற்படுத்தப்பட்டு இருக்கும் இனத்தவருக்கு, எந்தத் தமிழ்ச சாதியானும் இடையூறு செய்பவனாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்குள்ளே பேதங்கள் ஏற்றத் தாழ்வுகள் ஒழிவதற்காக வகுக்கப்பட்ட முறை தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் - சமூகநீதி என்பதை மறக்காமல் ஒவ்வொரு இனத்தாரும் முன்னேறுவோம்!

ஒவ்வொரு வகுப்பும் முன்னேறிவிட்ட நிலையில் தான்,

கோடானு கோடி

இந்தியரின் வெற்றி முழக்கம்

குருகுலப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னாலேயே பெரியார் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவம் என்ற சமூகநீதி வேண்டும் என்று போராடி வந்தார்.

குருகுலப் போராட்டம் அவருடைய போராட்டத் தைத் தீவிரமாக்க உதவியது என்றுதான் கூற வேண்டும்.

வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கை பார்ப்பனரல்லாதாருக்காகப் பாடுபட்டு வந்த நீதிக் கட்சியினரால்தான் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.

நீதிக் கட்சியின் முக்கிய கொள்கையாகவே இது அமைந்திருக்கிறது.

காங்கிரசில் இருந்த பெரியார் இந்தக் கொள்கை யின் நியாயத்தை அப்போதே உணர்ந்திருந்தார்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் என்ற இந்தக் கொள்கையை காங்கிரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதினார். இதற்காக, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று 1920ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டு வந்தார்.

1920-ல் இந்தத் தீர்மானத்தைப் பெரியார் கொண்டுவந்தார். திருநெல்வேலி காங்கிரஸ் மாகாண மாநாடு எஸ்.சீனிவாச ஐயர் அவகள் தலைமையில் நடந்தது, தலைவர் இந்தத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார்.

1921-ல் இராசகோபாலாச்சாரியார் தலைமை யில் தஞ்சாவூரில் நடந்த காங்கிரஸ் மாகாண மாநாட்டில் பெரியார் மீண்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தலைவர் இந்தத் தீர்மானத்தைத் தந்திரமாகப் பேசித் தடுத்துவிட்டார்.

1922-ல் திருப்பூரில் காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அதன் தலைவர் விஜயராகவாச் சாரியார். அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

1923-ல் தீர்மானம் மாநாட்டில் முன் மொழியப் பட்டது. ஆனால் எதிர்ப்பு ஏற்பட்டு அது கலவரமாக மாக மாறும் நிலையில் கைவிடப்பட்டது.

1924-ல் திருவண்ணாமலை காங்கிரஸ் மாநில மாநாடு பெரியார் தலைமையில் நடந்தது. அதில் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்திருந்தார் பெரியார். ஆனால், எஸ் சீனிவாச ஐயங்கார், இந்தத் தீர்மானத்தை முன்மொழியவிடாமல் தடுப்பதற்காக ஏராளமான ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து கூச்சலிட்டுக் குழப்பம் செய்து முன்மொழிய, விடாமல் தடுத்துவிட்டார்.

1925-ன் தொடக்கத்தில்தான் குருகுலப் போராட்டம் நடந்தது. 1925 இறுதியில் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவர முயன்றார் பெரியார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி.க அவரும் தீர்மானத்தை முன்மொழிய அனுமதிக்கவில்லை.

காங்கிரசால் தமிழர்கள் முன்னேற வழியே யில்லை. இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறிய பெரியார், மாநாட்டிலிருந்து வெளியேறினார். காங்கிரசிலிருந்து முற்ற முழுக்க விலகி விட்டார்.

காங்கிரசில் உறுப்பினராக இருந்த பல தமிழன்பர்கள் பெரியாரைப் பின்பற்றிக் காங்கிரஸ் கட்சியி லிருந்து விலகி பெரியார் அணியில் சேர்ந்து கொண்டார்கள்

பெரியார் அன்று முதல் சமூகநீதியை நிலை நாட்டுவதற்காக தன்மான இயக்கத்தைத் தோற்று வித்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார்.

அவருடைய உழைப்பின் பலன் இன்று கனியத் தொடங்கியிருக்கிறது.

தோற்றபோதெல்லாம் துவளாமல் அடுத்தடுத்து அவர் இடைவிடாது முயன்று வந்த காரணத்தால், இன்று நாம் வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்கி யிருக்கிறோம்.

பெரியாருடைய இடைவிடாத முயற்சியால் இன்று நாம் - தமிழ் மக்கள் உயர்ந்து வருகின்றோம்.

இந்த வெற்றி நடை. நம்மை முழு வெற்றி யிருக்கும் திசை நோக்கிச் செல்லப் பயன்படுகிறது.

சமூகநீதிக் குரல் இந்தியாவெங்கிலும் ஒலிக்கின்றது.

பெரியார் எழுப்பிய அந்தக் குரல் இன்று வெற்றிக் குரலாய் எங்கும் மக்கள் வாழ்வில் சமத்துவம் மலர வழிவகுக்கும் விடுதலை முழக்கமாய் ஒலிக் கின்றது.

கோடானு கோடி இந்திய மக்களின் எழுச்சிக் குரலாய் இன்று ஒலிக்கும் இந்த முழக்கம் அன்று பெரியார் எழுப்பிய முழக்கம்.

எனவே இந்திய மக்களாகிய நாம் பெரியாரை என்றும் நன்றியுடன் நினைப்போம்!

அவருடைய தன்மானக் கொள்கை - பகுத்தறிவுக் கொள்கை - நாடெங்கும் பரவ உழைப்பதாக உறுதி எடுத்துக் கொள்வோம்.

பயன்பட்ட நூல்கள்

தமிழர் தலைவர்-திரு. சாமி சிதம்பரனார்

தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

குத்துசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு

புரட்சியாளர் பெரியார்-நெ. து. சுந்தரவடிவேலு

வ. வே. ஸு. அய்யர்-ரா. அ. பத்மநாபன்

Self Respect Movement in Tamilnadu 1920-1949–By N. K. Mangala Murugesan.

Thanthai Periar Prior to 1930 By EM. Rajagopalan.

* * *

கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள்

1. கீதை காட்டும் பாதை

கீதையின் குழப்பங்கள்-சூழ்ச்சிகள்-மாந்தர் இனத்தைக் கூறு கூறாக்கும் ஏற்பாடுகள் யாவற்றையும் கீதை சுலோகங்களைக் கொண்டே விளக்குகின்றார் ஆசிரியர். சமூகநீதிக்குப் பகையான கருத்துக்களையே கீதை கொண்டுள்ளது என்பதைத் தெளிவாச்குகிறார்.

2. மதங்கள்-ஒரு ஞானப்பார்வை

வாழ்வில் முன்னேறவும், மறுமலர்ச்சியடையவும் சமுதாயத்தில் அன்பு தவழவும் மதங்கள் எவ்வாறெல்லாம் இடையூறாக உள்ளன என்பதைப் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விளக்கங்கள் இந்நூல் முழுவதிலும் தரப்பட்டுள்ளன. நூலில் தரப்பட்டுள்ள செய்திகள் சிந்தனைக்குரியவையாக அமைந்துள்ளன. - வள்ளுவர் வழி